செய்திகள்

மக்களின் கேள்விகளை சந்திக்க தயாராகுங்கள்- பா.ஜனதாவுக்கு சிவசேனா அறிவுரை

Published On 2019-03-13 07:49 GMT   |   Update On 2019-03-13 07:49 GMT
2014 பாராளுமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் குறித்து பொது மக்கள் கேள்வி கேட்கும் போது பதில் அளிக்க பா.ஜனதாவினர் தயாராக இருக்க வேண்டும் என்று சிவசேனா தெரிவித்துள்ளது. #LSPolls #BJP #ShivSena
மும்பை:

பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா அந்த கட்சியையும், பிரதமர் மோடியையும் தொடர்ந்து விமர்சனம் செய்தது.

இதனால் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் சிவசேனா கூட்டணி அமைக்காது என்று கருதப்பட்டது. ஆனால் பா.ஜனதாவுடன் அந்த கட்சி தொடர்ந்து கூட்டணி அமைத்து தொகுதி உடன்பாடு செய்தது.

மராட்டிய மாநிலத்தில் மொத்தம் 48 இடங்கள் உள்ளது. இதில் பா.ஜனதா 25 தொகுதிகளிலும், சிவசேனா 23 இடங்களிலும் போட்டியிடுகிறது.

தேர்தல் உடன்பாடுக்கு பிறகும் பா.ஜனதாவை சிவசேனா விமர்சனம் செய்துள்ளது தொடர்பாக அந்த கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் கூறி இருப்பதாவது:-



பிரதமர் நரேந்திர மோடி இதுவரை மன் கீ பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் வானொலியில் பேசி வந்தார். ஆனால் மக்களின் மனக்குரல் என்ன என்பது மே 23-ந்தேதி (பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியாகும் நாள்) தெரிய வரும்.

மக்களை நீண்ட காலம் முட்டாளாக்க முடியாது என்று வரலாறு சொல்கிறது. பொதுமக்களிடமும் கேள்வி இருக்கும். இதற்கான விடையை அவர்கள் வாக்கு பெட்டிகள் மூலம் அளிப்பார்கள்.

காஷ்மீரில் அமைதி ஏற்படுத்தப்படும். ராமர் கோவில் கட்டப்படும் என்று வாக்குறுதி அளித்து 2014 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் இந்த இரண்டு வாக்குறுதிகளும் தற்போது நிறைவேற்றவில்லை. இது குறித்து பொது மக்கள் கேள்வி கேட்கும் போது பதில் அளிக்க பா.ஜனதாவினர் தயாராக இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #LSPolls #BJP #ShivSena
Tags:    

Similar News