செய்திகள்

மத்தியில் புதிய ஆட்சி அமைக்க முயற்சி - எதிர்க்கட்சி தலைவர்கள் 21-ந்தேதி ஆலோசனை

Published On 2019-05-08 05:55 GMT   |   Update On 2019-05-08 05:55 GMT
மத்தியில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லியில் 21-ந்தேதி ஒன்று கூடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #Oppositionconclave #Oppositionconclavepostponed

புதுடெல்லி:

பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக நடத்தப்படும் தேர்தலில் இதுவரை 5 கட்ட தேர்தல் நடந்துள்ளது.

6-வது கட்ட தேர்தல் வருகிற 12-ந்தேதியும், 7-வது கட்ட தேர்தல் 19-ந்தேதியும் நடைபெற உள்ளது.

23-ந்தேதி 542 தொகுதிகளின் வாக்குகள் எண்ணி முடிவு அறிவிக்கப்பட உள்ளது. ஆட்சியைப் பிடிக்க 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. இந்த மேஜிக் நம்பரை இந்த தடவை பாரதிய ஜனதா, காங்கிரஸ் இரு தேசியக் கட்சிகளும் எட்ட வாய்ப்பு இல்லை என்று அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். இதனால் மத்தியில் யார் தலைமையில் ஆட்சி அமையும் என்ற ஆவல் கலந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்தியில் பா.ஜனதா, காங்கிரஸ் அல்லாத மாநில கட்சிகளின் ஒருங்கிணைந்த 3-வது அணி ஆட்சியை ஏற்படுத்த முயற்சி நடந்து வருகிறது. தெலுங்கானா மாநில முதல்- மந்திரி சந்திரசேகரராவ் கிங்-மேக்கராக மாறி இதற்கான நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கிடையே ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவும் மாநில கட்சிகளின் ஆட்சியை உருவாக்க இப்போதே களத்தில் இறங்கியுள்ளார். 23-ந்தேதி தேர்தல் முடிவுகள் வெளி வருவதற்கு முன்பே எதிர்க்கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளை ஒன்று திரட்டி ஒரு வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் அவர் இறங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-


பாராளுமன்ற தேர்தல் நிறைவு பெற இன்னும் 2 கட்ட ஓட்டுப்பதிவே உள்ளது. மே 19-ந்தேதியுடன் தேர்தல் முடிந்து விடும். எதிர்க்கட்சிகள் மிகவும் வலுவாக உள்ளன.

19-ந்தேதி தேர்தல் முடிந்ததும் மாநில கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளோம். தேர்தல் முடிவுகள் வெளியாகும் 23-ந் தேதிக்கு முன்பு டெல்லியில் இந்த கூட்டம் நடைபெறும். அனேகமாக 21-ந்தேதி இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற வாய்ப்பு உள்ளது.

இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் என்னென்ன செய்யலாம் என்பது பற்றி ஆய்வு நடத்தப்படும். மாநில கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்று திரண்டு பேசி சுமூக முடிவுக்கு வருவோம். தேர்தலில் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிட்ட மாநில கட்சிகள் கூட இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று ஒருங்கிணைய வாய்ப்புள்ளது.

மாநில கட்சிகள் அனைத்தும் சுமூகமாக பேசி புதிய பிரதமரை தேர்ந்து எடுப்போம். 23-ந்தேதிக்கு பிறகு மோடிக்கு பதில் மாநில கட்சியைச் சேர்ந்த ஒருவர் தான் பிரதமர் பதவியை ஏற்பார். பிரதமரை தேர்வு செய்யும் வி‌ஷயத்திலும் புதிய ஆட்சி அமைவதிலும் மூன்று விதமான நிலைப்பாடுகள் வரவே வாய்ப்புள்ளது.

ஒன்று எங்கள் கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகிக்கும். அல்லது எங்கள் கூட்டணியை காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரிக்கும். மூன்றாவது காங்கிரஸ் எங்களுடன் சேர்ந்து கூட்டணி அரசு அமைக்கலாம்.

இந்த மூன்று விதமான நிலைப்பாட்டை தவிர 4-வது விதமான முடிவு வர வாய்ப்பு இல்லை. சந்திரசேகரராவ் காங்கிரஸ் அல்லாத 3-வது அணி அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். காங்கிரஸ் துணை இல்லாமல் புதிய கூட்டணியை உருவாக்க இயலாது.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார். #Oppositionconclave #Oppositionconclavepostponed

Tags:    

Similar News