இந்தியா (National)
உக்ரைனில் பலியான நவீனின் வீட்டையும், அங்கு கூடியிருந்தவர்களையும் படத்தில் காணலாம்.

உக்ரைனில் பலியான மாணவர் பற்றி உருக்கமான தகவல்

Published On 2022-03-02 01:44 GMT   |   Update On 2022-03-02 01:44 GMT
உக்ரைனில் நடந்த ரஷிய தாக்குதலில் கர்நாடகத்தை சேர்ந்த நவீன் என்ற மருத்துவ மாணவன் உயிரிழந்தார். அவருடன் விடுதியில் தங்கி படித்து வந்த மாணவன் கண்ணீர் மல்க கூறியதாவது:-
பெங்களூரு :

உக்ரைனில் நடந்த ரஷிய தாக்குதலில் கர்நாடகத்தை சேர்ந்த நவீன் என்ற மருத்துவ மாணவன் உயிரிழந்தார். அவருடன் விடுதியில் தங்கி படித்து வந்த ஹாவேரியை சேர்ந்த அமித் என்ற மாணவன் கண்ணீர் மல்க கூறியதாவது:-

நவீனும் நானும் ஒரே விடுதியில் தங்கி படித்து வந்தோம். நான் 5-ம் ஆண்டும், நவீன் 4-ம் ஆண்டும் படித்து வந்தோம். இருவரும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் நண்பர்களாக பழகி வந்தோம். எங்களுடன் கர்நாடகத்தை சேர்ந்த 25 பேர் உள்ளனர். நாங்கள் பதுங்கு குழியில் இருந்து வந்தோம். முதல் இரண்டு நாட்கள் உணவு, நீர் கிடைத்தது. அதன் பின்னர் கிடைக்கவில்லை. இதனால் நாங்கள் இருவரும் தான் வெளியே சென்று உணவு, நீர் வாங்கி வந்தோம். எங்களுடன் இருந்தவா்களுக்கு உக்ரேனிய மொழி தெரியாது.

இதற்கு முன்பு நாங்கள் 2 முறை குறுக்கு வழியில் சென்று உணவு பொருட்கள், ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து வந்தோம். இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி வரை நாங்கள் தப்பிப்பது பற்றி பேசி கொண்டு இருந்தோம். மேலும் காலையில் பல்பொருள் அங்காடிக்கு சென்று உணவு பொருட்கள் வாங்குவது, ஏ.டி.எம். சென்று பணம் எடுப்பது என்று முடிவு செய்திருந்தோம். அதன்பின்னர் நாங்கள் தூங்கிவிட்டோம்.

ஆனால் காலை 6 மணிக்கு நவீன் மட்டும் எழுந்து தனியாக உணவு பொருட்கள் வாங்கவும், சக மாணவர்களுக்கு பணம் எடுக்கவும் ஏ.டி.எம்.க்கு சென்றார். நாங்கள் எழுந்து பார்த்தபோது, நவீன் கடைக்கு சென்றது தெரியவந்தது. பின்னர் அவரது உள்ளூர் செல்போன் எண்ணுக்கு தொடர்புகொண்டு சில உணவு பொருட்களும், ஏ.டி.எம்.மில் பணமும் எடுத்து வர கூறினோம். அவரும் எடுத்து வருவதாக தெரிவித்தார்.

ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்ப வரவில்லை. இதனால் அவரது உள்ளூர் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டோம்.

அப்போது எதிர்முனையில் பேசியவர், நவீன் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதனை கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். வழக்கமாக கடைக்கு நான், நவீன் உள்பட 3 பேர் செல்வோம். ஆனால் நேற்று நவீன் மட்டும் தான் சென்றார்.

நவீன் பலியான குண்டுவீச்சு தாக்குதல் நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் தான் நடந்துள்ளது. இதனால் நாங்கள் இருக்கும் பதுங்கு குழி பகுதியில் தான் ரஷியா தாக்குதல் நடத்துகிறது. எங்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. இதனால் எங்களை காப்பாற்ற இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் உருக்கமாக கூறினார்.

நவீனுடன் படித்து வந்த மாணவி ஒருவர் கூறுகையில், நவீன் எங்களுக்கு மிகவும் தைரியமூட்டினார். அவர் தனது உயிரை பொருட்படுத்தாமல் வெளியே சென்று உணவு பொருட்கள், பணம் எடுத்து வந்தார். நாங்கள் இந்தியா திரும்ப போலாந்து செல்ல திட்டமிட்டோம். அனைவரும் ஒன்றாக செல்ல வேண்டும் என்று கூறினார். நேற்றும் அவர், பல்பொருள் அங்காடிக்கு சென்று இந்திய பணத்தை டாலராக மாற்றி வருவதாக கூறி சென்றார்.

ஆனால் அவர் ரஷிய தாக்குதலுக்கு உயிரிழந்ததை கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளோம். நாங்கள் இருக்கும் இடத்தின் அருகே ரஷிய படை வந்துவிட்டது. எங்களை இந்திய அரசு மீட்க வேண்டும். தயவு செய்து விரைவாக எங்களை மீட்க நடவடிக்கை எடுங்கள் என்று கூறினார்.

Similar News