இந்தியா

ரேடார்கள் கொண்டு வரப்பட்ட விமானம்


மண்ணில் புதைந்த 300 பேரை தேட நவீன ரேடார்

Published On 2024-08-04 07:41 GMT   |   Update On 2024-08-04 08:53 GMT
  • நிலச்சரிவில் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.
  • பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்தமாத இறுதியில் தொடர்ந்து கனமழை பெய்தபடி இருந்தது. இதன் காரணமாக கடந்த 30-ந்தேதி அதிகாலை முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய 3 இடங்களில் அடுத்தடுத்து மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.

அதுமட்டுமின்றி சாலியாற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் இருந்த ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ராட்சத பாறைகள் விழுந்ததில் வீடு உள்ளிட்ட கட்டிடங்கள் நொறுங்கி மண்ணோடு மண்ணானது.

நிலச்சரிவில் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இந்த பயங்கர சம்பவத்தில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த பொது மக்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். பலர் மண்ணுக்குள் உயிரோடு புதைந்தனர்.

நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் கடற்படை, கப்பற்படை, விமானப்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக களமிறக்கப்பட்டனர். இதில் நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

மனித உடல்கள் சிக்கிய படியே இருந்ததால் பலி எண்ணிக்கை உயர்ந்த படி இருந்தது. சம்பவம் நடந்து 5-வது நாளான நேற்று வரை 356 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. ராட்சத பாறைகள் மற்றும் மரங்கள் உள்ளிட்ட இடிபாடுகளை பொக்லைன் உள்ளிட்ட எந்திரங்கள் மூலமாக அகற்றி பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

நிலச்சரிவில் சிக்கி பலியான 350-க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், 300-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி இருக்கின்றனர். அவர்களில் 24 தமிழர்களும் அடங்குவர். அவர்கள் மண்ணுக்குள் புதைந்தும், காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.


அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட மீட்பு குழுவினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக மண்ணுக்குள் உயிரோடு இருப்பவர்களை கண்டறியக் கூடிய நவீக கருவிகள் உள்ளிட்டவைகளை பயன் படுத்தினர்.

மேலும் இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை கண்டறியும் பணியில் ராணுவம் மற்றும் காவல் துறையில் உள்ள மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டன. அது மட்டுமின்றி ட்ரோன்களை பயன்படுத்தியும் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.

நிலச்சரிவு ஏற்பட்டு 5 நாட்களுக்கு மேல் ஆவதால் மாயமானவர்கள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்றும், அவர்கள் பலியாகியிருக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக தேடுதல் பணியில் மீட்பு படையினர் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை இன்று 357 ஆக உயர்ந்தது. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணி 6-வது நாளாக இன்று நடந்தது.

ராணுவத்தில் தரைப்படை, கடற்படை, விமானப்படை வீரர்கள், தேசிய பேரிடம் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், போலீசார், மருத்துவ குழுவினர், கடலோர காவல்படையினர், சமூக ஆர்வலர்கள் என 11 பிரிவினர் தேடுதல் பணியில் களமிறங்கி இருக்கின்றனர்.

அந்த பிரிவுகளை சேர்ந்த 1,264 பேர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள் 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தேடுதல் பணி நடக்கிறது. நவீன சென்சார் கருவிகள், ட்ரோன்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தியும் மாயமானவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் நவீன ரேடார் கருவிகளை கொண்டுவர முடிவு செய்யப்பட்டது.

அதன்படி உயர்தொழில் நுட்பம் கொண்ட 4 ரேடார்கள் டெல்லி மற்றும் சியாச்சினில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்பட்டன. "லைவ் விக்டிம் ரேடார்" என்று அழைக்கப்படும் அந்த ரேடார்கள், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு இன்று காலை கொண்டு செல்லப்பட்டு நிறுவப்பட்டன.

இந்த ரேடார்கள் மண்ணுக்குள் யாரேனும் உயிருடன் புதைந்து கிடக்கிறார்களா? என்பதை கண்டறியும். அவற்றின் மூலம் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மண்ணுக்குள் யாரேனும் புதைந்து கிடக்கிறார்களா? என்று ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

நிலச்சரிவு ஏற்பட்டு 5 நாட்களுக்கு மேல் ஆவதால் மாயமான 300-க்கும் மேற்பட்டவர்களின் நிலை என்ன ஆகியிருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Tags:    

Similar News