இந்தியா

கொடூர நோய்க்கு முகமூடி அணிந்திருப்பதாக கூறி வங்கியில் பட்டபகலில் ரூ.6 லட்சம் திருடிய கில்லாடி திருடன்

Published On 2023-11-03 06:37 GMT   |   Update On 2023-11-03 06:37 GMT
  • மேஜையில் ரூ.6.5 லட்சம் அடுக்கி வைத்து அதனை எந்திரம் மூலம் எண்ணிக் கொண்டிருந்தார்.
  • சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த வங்கி மேலாளர் அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் நரசாபுரத்தில் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு நேற்று பட்ட பகலில் முகமூடி அணிந்தபடி மர்ம நபர் ஒருவர் வந்தார்.

அவரிடம் முகமூடியை கழட்டி விட்டு உள்ளே செல்லுங்கள் என அங்கிருந்த காவலாளி தெரிவித்தார். அப்போது மர்ம நபர் தன்னுடைய முகத்தில் கொடூரமான நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதனை மறைப்பதற்காக தான் முகமூடி அணிந்துள்ளேன். மேலும் எனக்கு குடும்ப கஷ்டம் உள்ளது. அதனால் நகை அடகு வைக்க வந்துள்ளேன் என கூறினார். இதனை நம்பிய காவலாளி அவரை வங்கிக்குள் அனுமதித்தார்.

இதை தொடர்ந்து மர்ம நபர் கேஷியரிடம் சென்றார். நகை அடகு வைக்க வேண்டும் என கூறினார்.

அப்போது கேஷியர் காத்திருக்கும் படி வலியுறுத்தினார். மர்ம நபர் அங்கு காத்திருந்தார். அந்த நேரத்தில் அவரது மேஜையில் ரூ.6.5 லட்சம் அடுக்கி வைத்து அதனை எந்திரம் மூலம் எண்ணிக் கொண்டிருந்தார்.

அப்போது காத்திருந்த முகமூடி நபர் திடீரென தனது பையில் இருந்த பெரிய கத்தியை எடுத்து கேஷியரின் கழுத்தில் வைத்தார். பணம் முழுவதையும் தர வேண்டும் இல்லாவிட்டால் கழுத்தை அறுத்து விடுவேன் என மிரட்டினார்.

இதனைக் கண்டு வங்கிக்கு வந்திருந்த பொதுமக்கள் ஊழியர்கள் காவலாளி அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

ஒரு கையில் கத்தியை பிடித்தபடி மற்றொரு கையில் கேஷியர் முன்பு இருந்த பணத்தை தனது பையில் அள்ளிப் போட்டுக் கொண்டார். பின்னர் கத்தியை வெட்டுவது போல ஏந்திக்கொண்டு வங்கிக்கு வெளியே சென்றார். அங்கிருந்து அவரது வாகனம் மூலம் கில்லாடி திருடன் தப்பி சென்று விட்டார்.

இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த வங்கி மேலாளர் அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வரைந்து வந்தனர். வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் முகமூடி அணிந்த நபர் கத்தியை காட்டி பணத்தை கொள்ளை அடித்த காட்சிகள் பதிவாகி இருந்தன.

இதன் மூலம் திருடனை தேடி வருகின்றனர். வங்கியில் பட்டப் பகலில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது.

Tags:    

Similar News