பேரிடர் நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம்- ஆ.ராசா எம்.பி. குற்றச்சாட்டு
- மாநில பேரிடர் நிதி என்பது பேரிடரின் போது மாநில அரசு ஒதுக்கும் நிவாரண நிதியாகும்.
- பாஜக ஆளும் மாநிலங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்குவது போல, அனைத்து மாநிலங்களுக்கும் சமமான நிதி வழங்க வேண்டும்.
பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்று கேள்வி நேரத்தின் போது திமுக எம்.பி ஆ.ராசா பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிவாரண நிதி ஒதுக்குவதில் ஒன்றியஅரசு பாரபட்சம் காட்டுகிறது. நிதி வழங்குவது தொடர்பாக இதுவரை ஒன்றிய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை.
மாநில பேரிடர் நிதிக்கும், தேசிய பேரிடர் நிதிக்கும் எந்த தொடர்பும் இல்லை, மாநில பேரிடர் நிதி என்பது பேரிடரின் போது மாநில அரசு ஒதுக்கும் நிவாரண நிதியாகும். இது அனைத்து மாநிலத்துக்கும் பொதுவானது.
நிவாரணநிதி வழங்குவதில் அனைத்து மாநிலங்களையும் சமமாக நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்குவது போல, அனைத்து மாநிலங்களுக்கும் சமமான நிதி வழங்க வேண்டும்.
தேசியபேரிடர் நிவாரண நிதியில், அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் சமமான நிவாரணநிதி வழங்கும் நிலையை உறுதி அளிக்கும் வகையில் புதிய விதிகளை வகுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.