காதலியை கொல்வதற்கு முன்பு மகாராஷ்டிராவில் இருந்து டெல்லிக்கு வீட்டை மாற்றிய அப்தாப்
- பொருட்களை டெல்லிக்கு கொண்டு செல்ல 37 பெட்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
- பணத்தை கொடுப்பது தொடர்பாக காதலர்கள் இடையே சண்டை நிகழ்ந்துள்ளது.
டெல்லியில் லிவிங் டுகெதர் முறையில் குடும்பம் நடத்தி வந்த ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண், காதலன் அப்தாப்பால் 35 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் சாட்சியங்களைத் தேடுவதற்காக மகாராஷ்டிரா, அரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு டெல்லி காவல்துறை குழுக்கள் விரைந்துள்ளன.
இந்நிலையில் டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த காதலர்கள், அதற்கு முன்பு மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து கடந்த ஜூன் மாதம் அப்தாப், டெல்லிக்கு உடமைகளை மாற்றி உள்ளார். இதற்காக 37 பெட்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
குட்லக் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் நிறுவனம் மூலம் மரச்சாமான்கள் மற்றும் பிற வீட்டு உபயோகப் பொருட்களை கொண்டு செல்வதற்காக ரூ.20,000 செலுத்தப்பட்டுள்ளது. முன்னதாக இந்த பணத்தை யார் கொடுப்பது என்பது தொடர்பாக இருவரும் சண்டை போட்டதாக அப்தாப் காவல்துறை விசாரணையில் தெரிவித்துள்ளார்.
20 ஆயிரம் ரூபாய் யாருடைய வங்கி கணக்கில் இருந்து செலுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஷ்ரத்தாவும், அப்தாப்பும் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அப்தாப் குடும்ப உறுப்பினர்கள் வாக்குமூலத்தையும் போலீஸார் பதிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிராவை விட்டு வெளியேறிய பிறகு, காதலர்கள் இருவரும் இமாச்சலப் பிரதேசம் உட்பட பல இடங்களுக்குச் சென்றுள்ளனர். அந்த பயணங்களின் போது அவர்களுக்கு இடையே ஏதாவது தகராறு ஏற்பட்டதா, அதனால் இந்த கொலை நடைபெற்றதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.