இந்தியா

செல்போன் செயலி மூலம் ரெயில்வே டிக்கெட் பதிவு செய்ய கூடுதல் வசதி

Published On 2022-11-12 03:47 GMT   |   Update On 2022-11-12 03:47 GMT
  • இந்த செயலி மூலம் 5 கி.மீ. தூரம் வரை முன்பதிவல்லாத டிக்கெட்டுகளை பதிவு செய்ய முடிகிறது.
  • தற்போது, ஒரு ரெயில் நிலையத்தில் இருந்து 20 கி.மீ. தூரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி :

ரெயில்வேயின் முன்பதிவல்லாத டிக்கெட் பதிவு அமைப்பு (யு.டி.எஸ்.) செயலி மூலம் பயணிகள் சீசன் டிக்கெட்டுகள், மாதாந்திர பாஸ்கள், பிளாட்பாரம் டிக்கெட்டுகள் போன்றவற்றை பதிவு செய்ய முடிகிறது. இதனால் பயணிகள் டிக்கெட் கவுண்ட்டரில் காத்திருக்க தேவையில்லாத நிலையுடன், அவர்களின் நேரமும் மிச்சமாகிறது.

இந்த செயலி மூலம் பயணிகள், புறநகர் அல்லாத பகுதிகளில் ஒரு ரெயில் நிலையத்தில் இருந்து 5 கி.மீ. தூரம் வரை முன்பதிவல்லாத டிக்கெட்டுகளை பதிவு செய்ய முடிகிறது. அது தற்போது, ஒரு ரெயில் நிலையத்தில் இருந்து 20 கி.மீ. தூரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, புறநகர்ப் பகுதிகளில் இந்த தூரம் 2 கி.மீ. தூரத்தில் இருந்து 5 கி.மீ.யாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தினசரி பாசஞ்சர் ரெயில்களிலும், நீண்டதூர ரெயில்களிலும் பொதுப் பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்று இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே வாரியம் கூறியுள்ளது.

இதுதொடர்பான அறிவுறுத்தல் அனைத்து ரெயில்வே மண்டலங்களுக்கும் ரெயில்வே வாரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 கி.மீ. தூர கட்டுப்பாட்டை 10 கி.மீ. அளவுக்கு அதிகரிக்க விரும்பும் மண்டல ரெயில்வே நிர்வாகங்கள், அதுகுறித்து ரெயில்வே தகவல் அமைப்பு மையத்துக்கு தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News