இந்தியா (National)

பரபரப்பான கட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. வழக்கு- சட்டத்தின் ஆதரவு யாருக்கு?

Published On 2023-01-05 09:21 GMT   |   Update On 2023-01-05 09:21 GMT
  • ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டதால் பொதுக்குழு அவரை நீக்கியதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.
  • அ.தி.மு.க.வுக்கு நீயா? நானா? என்று எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே எழுந்துள்ள அதிகார போட்டியின் முடிவு சுப்ரீம் கோர்ட்டின் கைகளில் உள்ளது.

புதுடெல்லி:

அ.தி.மு.க. யார் கைக்கு செல்லப் போகிறது என்ற எதிர்பார்ப்பை சுப்ரீம் கோர்ட்டில் சூடு பிடித்து வரும் பொதுக்குழு தொடர்பான விசாரணை எகிற வைத்துள்ளது.

அ.தி.மு.க.வுக்கு நீயா? நானா? என்று எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே எழுந்துள்ள அதிகார போட்டியின் முடிவு சுப்ரீம் கோர்ட்டின் கைகளில் உள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டின் தனி நீதிபதி தீர்ப்பளித்தார்.

அதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த ஐகோர்ட்டு பெஞ்ச் பொதுக்குழு கூட்டப்பட்டது செல்லும் என்று தீர்ப்பளித்தது.

ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஓ.பி.எஸ். ஆதரவாளரான வைரமுத்து என்பவரும் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் விசாரித்து வருகிறார்கள். பல கட்டங்களாக தொடர்ந்து நடந்த இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிக்க வேண்டியதன் அவசியத்தையும், இதுவரை வழக்கு கடந்து வந்த பாதைகளையும் கேட்டனர்.

அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல் சி.ஏ.சுந்தரம், சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் சிவில் வழக்கு தொடர்ந்ததையும், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்ட விபரத்தையும் எடுத்து கூறினார்கள்.

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டனர். அந்த பதவி 2026-ம் ஆண்டு வரை உள்ளது என்று வைரமுத்து தரப்பு வக்கீல் ரஞ்சித் குமார் கூறினார்.

ஆனால் இருவரும் போட்டியில்லாமல் தேர்வு செய்யப்பட்டது செயற்குழுவில் தான். அதற்கு பொதுக் குழுவின் ஒப்புதல் தேவை என்றார்.

அ.தி.மு.க. பொதுக்குழு கட்சியின் விதிகளுக்கு முரணாக கூட்டப்பட்டதாகவும், தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளரை அந்த பொதுக்குழுவில் நீக்கி இருக்கிறார்கள்.

அதற்கு ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டதால் பொதுக்குழு அவரை நீக்கியதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.

நீதிபதிகள் இந்த வழக்கை நீட்டிக்க விரும்பவில்லை. இந்த வாரத்துக்குள் முடிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.

வைரமுத்து தரப்பில் 45 நிமிடங்கள், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஒரு மணி நேரம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் 30 நிமிடம் வாதிடுவதற்கு நேரம் கேட்டுள்ளார்கள்.

இந்த பரபரப்பான கட்டத்தில் இன்று பிற்பகலில் மீண்டும் விசாரணை தொடங்கியது. இன்று அல்லது நாளைக்குள் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News