இந்தியா

சிறப்பு பிரார்த்தனை, இறுதிச்சடங்கு முடிந்து உம்மன் சாண்டியின் உடல் நல்லடக்கம்

Published On 2023-07-20 20:48 GMT   |   Update On 2023-07-20 20:48 GMT
  • சாலையின் இருபுறத்திலும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு நின்று உம்மன்சாண்டி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
  • உம்மன் சாண்டியின் இறுதிச்சடங்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கலந்துக் கொண்டார்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை மரணம் அடைந்தார்.

அவரது உடல் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு கொண்டுவரப்பட்டது. முதலில் அவரது உடல் பூஜப்புரை புதுப்பள்ளி இல்லத்தில் வைக்கப்பட்டது. பின்பு திருவனந்தபுரம் தலைமை செயலக தர்பார் அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அதன்பிறகு இரவில் புனித ஜார்ஜ் ஆர்த்தோடக்ஸ் ஆலயத்துக்கு கொண்டு செல்லப்பட்ட உம்மன் சாண்டியின் உடல், பின்னர் அங்கிருந்து கேரள மாநில காங்கிரஸ் தலைமையகமான இந்திரா பவனில் பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டது.

உம்மன்சாண்டியின் உடல் வைக்கப்பட்டிருந்த இடங்களில் ஆயிரக்கணக்கானோர் வந்து, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அதனைத்தொடர்ந்து இரவில் உம்மன்சாண்டியின் உடல் மீண்டும் திருவனந்தபுரத்தில் உள்ள புதுப்பள்ளி இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அங்கிருந்து அவரது உடல் சொந்த ஊரான கோட்டயம் புதுப்பள்ளிக்கு கொண்டு செல்ல, அவரது இறுதி ஊர்வலம் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. உம்மன் சாண்டியின் உடல், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கேரள அரசு போக்குவரத்து கழக பஸ்சில் எடுத்துச் செல்லப்பட்டது.

சாலையின் இருபுறத்திலும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு நின்று உம்மன்சாண்டி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு நின்றதால் உம்மன்சாண்டியின் உடல் வைக்கப்பட்டிருந்த வாகனம் ஊர்ந்தபடியே சென்றது.

அவர் வாகனம் வந்த இடங்களில் எல்லாம், இரவையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் திரண்டு நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள. இதனால் திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு புறப்பட்ட உம்மன்சாண்டி இறுதி ஊர்வலம், சங்கனாச்சேரிக்கு நேற்று காலை 6 மணிக்கே வந்தடைந்தது.

மற்ற இடங்களைப் போன்று அங்கும் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது. இதனால் உம்மன்சாண்டி இறுதி ஊர்வல வாகனம் சங்கனாச்சேரியை கடந்து செல்லவும் வெகுநேரம் ஆனது. பின்பு உம்மன் சாண்டியின் இறுதி ஊர்வலம் கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளியை நோக்கி சென்றது. புதுப்பள்ளியை ஊர்வலம் அடைந்ததும், உம்மன்சாண்டியின் மூதாதையரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பின்னர் மாலையில் புனித ஜார்ஜ் ஆர்த்தோடக்ஸ் தேவாலயத்திற்கு உம்மன்சாண்டியின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு சிறப்பு பிரார்த்தனை மற்றும் இறுதிச்சடங்கு நடைபெற்றது. அதன்பின்னர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அவரது கடைசி விருப்பத்தின்படி, எந்தவித அரசு மரியாதையும் இன்றி அவரது உடலை அடக்கம் செய்ய விரும்புவதாக அவரது குடும்பத்தினர் கேரள மாநில தலைமை செயலருக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதற்கு முதலில் சம்மதம் தெரிவிக்காக கேரள அரசு, பின்னர் உம்மன்சாண்டியின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. இதனால் உம்மன்சாண்டியின் உடல் அரசு மரியாதையின்றி அடக்கம் செய்யப்பட்டது.

உம்மன் சாண்டியின் இறுதிச்சடங்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமதுகான், முதல்-மந்திரி பினராய் விஜயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உம்மன்சாண்டியின் இறுதிச்சடங்கை முன்னிட்டு கோட்டயம் மாவட்டத்தில் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டிருந்தது.

Tags:    

Similar News