இந்தியா

நடுவானில் பழுதான பயணிகள் விமானம்: விமானியின் சாமர்த்தியத்தால் பத்திரமாக தரை இறங்கியது

Published On 2022-07-16 11:57 GMT   |   Update On 2022-07-16 11:57 GMT
  • கேரளாவின் கொச்சிக்கு வந்த விமானத்தில் 222 பயணிகள் இருந்தனர்.
  • கொச்சியை நெருங்கியபோது திடீரென விமானத்தின் ஹைட்ராலிக் எந்திரங்கள் செயல்படவில்லை

திருவனந்தபுரம்:

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நேற்று மாலை ஏர் அரேபியா விமானம் ஒன்று கேரளாவின் கொச்சிக்கு புறப்பட்டது.

இந்த விமானத்தில் 222 பயணிகள் இருந்தனர்.விமானி உள்பட 7 ஊழியர்களும் இருந்தனர். விமானம் கொச்சி விமான நிலையத்தில் நேற்றிரவு 7.13 மணிக்கு தரை இறங்க வேண்டும்.

விமானம் கொச்சியை நெருங்கிய போது திடீரென விமானத்தின் ஹைட்ராலிக் எந்திரங்கள் செயல்படவில்லை. இதை அறிந்த விமானி உடனே கொச்சி விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

நடுவானில் விமானம் பழுதானதை தொடர்ந்து கொச்சி விமான நிலையத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. ஓடு பாதையில் இருந்த விமானங்கள் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் அவசர பாதுகாப்பு எந்திரங்கள் உதவியுடன் விமானத்தின் பழுதை சரிசெய்யும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

இதையடுத்து விமானம் 16 நிமிடங்கள் தாமதாமாக 7.29 மணிக்கு கொச்சி விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறங்கியது. இது பற்றி பயணிகள் கூறும்போது, விமானியின் சாமர்த்தியத்தால் விமானம் பத்திரமாக தரை இறங்கியதாக தெரிவித்தனர்.

விமானம் தரை இறங்கிய பின்பு விமான நிலையத்தில் அறிவிக்கப்பட்டிருந்த அவசர நிலை வாபஸ் பெறப்பட்டது. அதன்பின்பு மற்ற விமானங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன.

Tags:    

Similar News