எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இருக்கையில் எக்ஸ்ரே எதற்கு?: ராகுல் காந்தியை கிண்டல் செய்த அகிலேஷ்
- சாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் ஏன் நடத்தவில்லை என அகிலேஷ் குற்றம்சாட்டினார்.
- சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக இந்தியா கூட்டணியில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
போபால்:
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
ராகுல்காந்தி நேற்று பேசும்போது இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு தேவை. இது ஒவ்வொரு சமூக மக்களை எடுத்துக்காட்டும் எக்ஸ்ரே என்றார்.
இந்நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் ஏன் நடத்தவில்லை என சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, மத்திய பிரதேசத்தில் பிரசாரம் செய்த சமாஜ்வாடி கட்சி தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல் மந்திரியுமான அகிலேஷ் யாதவ் கூறியதாவது:
சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி காங்கிரஸ் பேசுவது மிகப்பெரிய அதிசயம். எக்ஸ்ரே பற்றி பேசுபவர்கள் தான் சுதந்திரத்திற்கு பிறகு சாதிவாரி கணக்கெடுப்பை நிறுத்தியவர்கள். எக்ஸ்ரே என்பது அந்தக் காலத்தின் தேவை. தற்போது எம்.ஆர்.ஐ, சி.டி. ஸ்கேன் வைத்துள்ளோம். தற்போது நோய் பரவிவிட்டது. இந்தப் பிரச்சினையை அப்போதே தீர்த்து இருந்தால் இவ்வளவு பெரிய இடைவெளி என்பது இருந்திருக்காது.
சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸ் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவில்லை. இன்றைக்கு அவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த விரும்புகிறார்கள்? ஏனென்றால் அவர்களின் பாரம்பரிய வாக்கு வங்கி தற்போது இல்லை என்பது அவர்களுக்கு தெரியும் என கூறினார்.