இந்தியா (National)

தெலுங்கானாவில் பஸ்சில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம்

Published On 2024-07-07 07:12 GMT   |   Update On 2024-07-07 07:12 GMT
  • சிகிச்சைக்கு பின் தாய் மற்றும் குழந்தை நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
  • தெலுங்கானா மாநிலத்தில் அரசு பஸ் மற்றும் பஸ் நிலையங்களில் குழந்தைகள் பிறந்தால் அந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம் வழங்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த முஷீராபாத் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வேதா. கர்ப்பிணியான இவர் நேற்று முன்தினம் காலை அரசு பஸ்சில் பகதூர் புரா பகுதிக்கு சென்றார். பஸ் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஸ்வேதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. வலி அதிகமானதால் கதறி துடித்தார்.

இதனை அடுத்து சாலையோரம் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பஸ்சில் இருந்த பெண் கண்டக்டர் சரோஜா மற்றும் பயணிகள் ஸ்வேதாவுக்கு பஸ்சிலேயே பிரசவம் பார்த்தனர். இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனை கேள்விப்பட்டதும் கீழே இருந்து இறங்கி நின்ற ஆண் பயணிகள் மற்றும் பெண்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மேலும் பிரசவம் பார்த்த பெண் கண்டக்டர் சரோஜாவுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து தாய் மற்றும் குழந்தையை அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் தாய் மற்றும் குழந்தை நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது. பஸ் கண்டக்டருக்கு போக்குவரத்து துறை அதிகாரிகளும் பாராட்டு தெரிவித்தனர். மேலும் பஸ்சில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம் செய்வதற்கான பஸ் பாஸ் வழங்கப்பட்டது.

தெலுங்கானா மாநிலத்தில் அரசு பஸ் மற்றும் பஸ் நிலையங்களில் குழந்தைகள் பிறந்தால் அந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம் வழங்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பஸ்சில் பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணத்திற்கான பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது என்றனர்.

Tags:    

Similar News