தேர்தல் பணி: மத்திய பிரதேசத்தில் முன்னணியில் இருக்கும் பா.ஜனதா
- பிரதமர் மோடி தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன் 9 முறை ம.பி. சென்றுள்ளார்
- அமித் ஷா கடந்த ஏழு மாதங்களில் ஐந்து முறை மத்திய பிரதேசம் சென்றுள்ளார்
ஐந்து மாநில தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 17-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. டிசம்பர் 3-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
மத்திய பிரதேசத்தை பொறுத்தவரை பா.ஜனதாவுக்கும், காங்கிரஸுக்கும் இடையில்தான் நேரடி போட்டி. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே இரண்டு கட்சிகளும் தேர்தல் பணியை தொடங்கிவிட்டன. என்றாலும், ஆளும் பா.ஜனதா கட்சியே தேர்தல் பணியில் முன்னணி வகிக்கிறது.
பிரதமர் மோடி 9 முறை மத்திய பிரதேசம் சென்றுள்ளார். பொதுக்கூட்டம், கட்சி நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசியுள்ளார். பா.ஜனதா கட்சி ஆகஸ்ட் 17-ந்தேதியே முதற்கட்டமாக 39 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. தற்போது வரை 136 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. கடந்த ஏழு மாதங்களில் ஐந்து முறை மத்திய அமைச்சர் அமித் ஷா மத்திய பிரதேசம் சென்றுள்ளார்.
அதேவேளையில், காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, கடந்த ஜூன் மாதத்தில் இருந்து மூன்று முறை தேர்தல் பிரசாரம் தொடர்பாக மத்திய பிரதேசம் சென்றுள்ளார். ஜபால்புரில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளார். ராகுல் காந்தி இதுவரை ஒரேயொரு தேர்தல் பேரணியில் மட்டும் கலந்து கொண்டுள்ளார்.
பா.ஜனதாவினர் மக்களிடையே நேரடியாக மிகப்பெரிய அளவில் சென்றடைந்துள்ளனர். அக்கட்சி ஜன் ஆஷிர்வாத் யாத்திரை மூலம் 223 தொகுதிகளில் மக்களை சந்தித்துள்ளது. இந்த யாத்திரை செப்டம்பர் 3-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 25-ந்தேதி வரை நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சி ஜன் ஆக்ரோஷ் யாத்திரை மூலம் 230 தொகுதிகளில் மக்களை சந்தித்து வருகிறது. இந்த யாத்திரை செப்டம்பர் 19-ந்தேதி தொடங்கி, கடந்த 5-ந்தேதி முடிவடைந்தது.