திரிபுராவில் காங்கிரஸ், பாஜக இடையே மோதல்: 19 பேர் காயம்- ராகுல்காந்தி கண்டனம்
- இடைத்தேர்தல் முடிவு வெளியானவுடன் காங்கிரஸ் அலுவலகத்தின் மீது தாக்குதல்.
- மோதலில் ஈடுபட்ட கும்பலை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
அகர்தலா:
திரிபுரா மாநிலத்தில் 4 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் ஆளும் பாஜக 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அகர்தலா தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சுதிப் ராய் பர்மன் வெற்றி பெற்றார்.
இந்த தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்த பாஜக, காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் வெடித்தது. இதில் 19 பேர் காயம் அடைந்தனர்.
திரிபுராக மாநில காங்கிரஸ் தலைவர் பிரஜித் சின்ஹா செங்கல்லால் தாக்கப்பட்டதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், காங்கிரஸ் தொண்டர் ஒருவர் பாஜக ஆதரவாளர்களால் கத்தியால் குத்தப்பட்டதாகவும், அம்மாநில காங்கிரஸ் ஊடகப் பொறுப்பாளர் ஆசிஷ் குமார் சாஹா தெரிவித்துள்ளார்.
மோதலில் ஈடுபட்ட கும்பலை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் அந்த பகுதி போர் களம் போல் காட்சி அளித்தது. மோதலுக்குப் பிறகு காங்கிரஸ் அலுவலகம் அமைந்துள்ள பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.
காங்கிரஸ் கட்சியினர் நடத்திய தாக்குதலில் பாஜக ஆதரவாளர்கள் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக திரிபுரா தகவல் மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் சுஷாந்தா சவுத்ரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், திரிபுராவில் காங்கிரசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது பாஜக குண்டர்கள் நடத்திய தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். மக்கள் எங்களுடன் உள்ளனர். இந்த தாக்குதலை தடுக்காமல் போலீசார் வேடிக்கை பார்த்தது வெட்கக்கேடு. அந்த குண்டர்களை நீதியின் முன்பு நிறுத்த வேண்டும். இவ்வாறு தமது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.