இந்தியா

ஊழலை மறைக்கவே தலைமை செயலக கட்டிடத்தில் பாஜக தீ வைக்கிறது: காங்கிரஸ் விமர்சனம்

Published On 2024-03-09 15:13 GMT   |   Update On 2024-03-09 15:13 GMT
  • தலைமை செயலகமான வல்ல பவனில் 4 முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
  • இந்தியாவில் குறிப்பாக மத்தியப் பிரதேச தலைமை செயலகத்தில் மட்டும் ஏன் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது?

மத்திய பிரதேச தலைநகர் போபாலில், அரசின் தலைமை செயலகமான வல்ல பவன் (Vallabh Bhavan), உள்ளது. இன்று காலை, தலைமை செயலக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் கிடைத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பாய்ச்சி தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தீப்பற்றி எரியும் கட்டிடத்தில் இருந்து கரும் புகை வெளியேறி அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

தீ விபத்து குறித்து பேசிய ம.பி. முதலமைச்சர் மோகன் யாதவ், "ஆட்சியரிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தீ விபத்தை கட்டுக்குள் கொண்டு வரும் விதமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என தெரிய வந்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளேன்" என தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜிதேந்திர பட்வாரி, "ஏற்கனவே தலைமை செயலகமான வல்லப் பவனில் 4 முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு யார் பொறுப்பேற்பது? ஆனால் தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்தியாவில் குறிப்பாக மத்தியப் பிரதேச தலைமை செயலகத்தில் மட்டும் ஏன் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் உமாங் சிங்கார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், முதலமைச்சர் மோகன் யாதவுக்கும் முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கும் இடையே பிரச்சினை உள்ளது. அதனால் தான் சிவராஜ் சிங் சவுகான் தனது ஊழல் கோப்புகளை வல்ல பவனில் வைத்து எரித்து வருகிறார். பாஜக அரசின் உள்கட்சி பிரச்சினைகளால் லட்சக்கணக்கான மக்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. மோசடி செய்து தீ வைப்பது பாஜக அரசின் பழைய வழக்கம் என்று அவர் பதிவிட்டுள்ளார். 

Tags:    

Similar News