இந்தியா (National)

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்காக 3 மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை

Published On 2024-09-30 02:30 GMT   |   Update On 2024-09-30 02:30 GMT
  • பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும் மசோதா ஆகும்.
  • மாநில விவகாரங்களை கையாளும் இந்த மசோதாவும் 50 சதவீத மாநிலங்களின் ஒப்புதலை பெற வேண்டும்.

புதுடெல்லி:

பாராளுமன்றம், சட்டமன்றங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டிருந்த ராம்நாத் கோவிந்த் கமிட்டி அளித்த அறிக்கைக்கு மத்திய மந்திரி சபை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. அத்துடன் இந்த குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த சுமார் 18 அரசியல் சாசன திருத்தங்களை மேற்கொள்ள இந்த கமிட்டி பரிந்துரைத்து இருந்தது.

எனவே இதற்காக 3 மசோதாக்களை பாராளுமன்றத்தில் கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் அரசியல் சாசனத்தை திருத்த வகை செய்யும் 2 மசோக்களும் அடங்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இதில் முதலாவது திருத்த மசோதாவானது, பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும் மசோதா ஆகும்.

இந்த மசோதா மூலம் அரசியல் சாசனப்பிரிவு 82 ஏ-ல் திருத்தம் (மக்களவை, சட்டசபைகளின் பதவிக்காலத்தை ஒன்றாக முடித்தல் மற்றும் தேதி) செய்யப்படும். மேலும் அரசியல் சட்டப்பிரிவு 83 (2)-லும் இதன் மூலம் திருத்தம் (மக்களவை பதவிக்காலம் மற்றும் கலைப்பு) மேற்கொள்ளப்படும்.

இதைப்போல சட்டசபைகளைக் கலைப்பது மற்றும் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற சொற்களைச் சேர்ப்பதற்காக சட்டப்பிரிவு 327-ஐ திருத்துவது தொடர்பான விதிகளும் இதில் உள்ளன.

இவ்வளவு திருத்தங்களை மேற்கொள்ள வகை செய்யும் இந்த முதலாவது திருத்த மசோதாவுக்கு 50 சதவீத மாநிலங்களின் ஒப்புதல் தேவைப்படும்.

2-வது திருத்த மசோதா வாக்காளர் பட்டியல் தொடர்பானது ஆகும். அதாவது உள்ளாட்சி தேர்தல்களுக்காக மாநில தேர்தல் ஆணையங்களுடன் கலந்தாலோசித்து தேர்தல் கமிஷனால் பொது வாக்காளர் பட்டியலை தயாரிப்பது தொடர்பாக அரசியலமைப்பு விதிகளை திருத்த வழிவகை செய்கிறது.

இந்த திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்களுடன், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் உருவாக்கும்.

மாநில விவகாரங்களை கையாளும் இந்த மசோதாவும் 50 சதவீத மாநிலங்களின் ஒப்புதலை பெற வேண்டும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

3-வது மசோதா சாதாரணமானது ஆகும். இது சட்டசபை கொண்ட புதுச்சேரி, டெல்லி, காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களை கையாளும் சட்ட வழிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ளும் வகையில் உருவாக்கப்படுகிறது.

இது வழக்கமான மசோதா என்பதால் மாநிலங்களின் ஒப்புதல் தேவை இல்லை.

இவ்வாறு 3 மசோதாக்களின் தயாரிப்பில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News