அக்னிபாத் திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வர மத்திய அரசு திட்டம்?
- 23 வயது வரைவிலான இளைஞர்கள் 4 வருடம் என்ற அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.
- 4 வருடத்திற்குப் பிறகு 15 வருடத்திற்கு 25 சதவீத வீரர்களுக்கு பணி வழங்கப்படும்.
மத்திய அரசு முப்படைகளில் வீரர்களை சேர்ப்பதற்கான அக்னிபாத் திட்டத்தை கடந்த 2022-ம் ஆண்டு அமல்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் முப்படைகளில் 17 1/2 வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்கள் சேர்க்கப்படுவார்கள்.
அவர்கள் நான்கு வருடம் பணிபுரிந்த பின்னர் ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். அதன்பின் 15 வருடத்திற்கு 25 சதவீதம் பேரை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளது. பின்னர் வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டது. பணிக்காலத்தின்போது உயிரிழந்தால் இழப்பீடாக ஒரு கோடி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
பாதுகாப்புப் படைகளின் செலவினங்களைக் குறைப்பதற்கும், வயது வரம்பைக் குறைப்பதற்கும் மத்திய அரசால் கொண்டு வரவப்பட்டது. ஆனால், ராணுவ வீரர்களை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவது, அவர்களுக்கு தியாகிகள் என்ற பெயர கிடைக்காது என எதிர்க்கட்சிகள் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன.
காங்கிரஸ் கட்சி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பாராளுமன்றத்தில் இத்திட்டத்தை கடுமையான எதிர்த்து பேசினார். காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்க வந்தால் அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும் என்றார்.
இந்த நிலையில் மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது 25 சதவீதம் தக்கவைத்துக் கொள்ளும் திட்டம் உள்ளது. இந்த சதவீதத்தை அதிகரிக்க உள்ளதாகவும, வீரர்களின் சம்பளம் மற்றும் உரிமைகள் உள்ளிட்டவைகளில் மாற்றங்கள் கொண்டு வர இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
திட்டத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பு மற்றும் பயன்களை மேம்படுத்துவதற்காக இந்த மாற்றங்கள் மேற்கொள்ள இருப்பதாக பாதுகாப்புத்துறை சார்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.