சிவசேனா பிரச்சினைக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை: சந்திரகாந்த் பாட்டீல்
- ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைமைக்கு எதிராக ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் வுகாத்தியில் முகாமிட்டு உள்ளார்.
- ஏக்நாத் ஷிண்டேவின் முடிவுக்கு பின்னணியில் பாஜக இருப்பதாக சரத்பவார் கூறியிருந்தார்.
மும்பை :
சிவசேனாவை சேர்ந்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைமைக்கு எதிராக ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளார். ஏக்நாத் ஷிண்டேவின் முடிவுக்கு பின்னணியில் பா.ஜனதா இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பேசுகையில், சக்திவாய்ந்த தேசிய கட்சி ஆதரவு தனக்கு இருப்பதாக கூறினார். இதற்கிடையே சிவசேனாவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கும், பாஜனதாவுக்கும் தொடர்பில்லை என அந்த கட்சியின் மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "மகாவிகாஸ் அகாடி அல்லது சிவசேனா கட்சிக்குள் நடக்கும் பிரச்சினைகளுக்கும் பா.ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நேற்று முன்தினம் மதியம் மும்பையில் நான் தேவேந்திர பட்னாவிசுடன் மதிய உணவு சாப்பிட்டேன். அதன் பிறகு அவர் சில வேலை காரணமாக டெல்லி சென்றுவிட்டார்" என்றார்.
இதேபோல பா.ஜனதா மும்பை நிர்வாகி மோகித் கம்போஜ் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் அசாமில் இருப்பது குறித்து கேட்ட போது, மோகித் கம்போஜிக்கு எல்லா கட்சியிலும் நண்பர்கள் உள்ளனர், எனவே சிலருக்கு உதவி செய்ய அவர் அங்கு சென்று இருக்கலாம் என்றார்.