இந்தியா

ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தியின் வேட்பு மனுவை நிராகரிக்க கோரி புகார்

Published On 2024-05-06 05:11 GMT   |   Update On 2024-05-06 06:02 GMT
  • ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
  • இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

புதுடெல்லி:

ராகுல் காந்தியின் வேட்பு மனுவை நிராகரிக்க கோரி ரேபரேலி தொகுதி தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அனிருத் பிரதாப் சிங் என்பவர் சார்பில் வழக்கறிஞர் அசோக் பாண்டே என்பவர் இந்த புகார் மனுவை அளித்துள்ளார். இது குறித்து வழக்கறிஞர் பாண்டே கூறியதாவது:-

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் 2 ஆண்டு சிறை தண்டனைக்கு உச்ச நீதி மன்றம் இடைக்கால தடை தான் விதித்துள்ளது. இந்த வழக்கில் எந்த இறுதி தீர்ப்பும் வழங்கவில்லை.

2 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்துவிடுகிறார்கள். அவதூறு வழக்கில் சிறை தண்டனையை நிறுத்தி வைத்திருப்பதற்கும், தேர்தலில் போட்டியிடும் அனுமதிக்கும் தொடர்பு இல்லை.

இரண்டாவதாக கடந்த 2006-ம் ஆண்டு தனது குடியுரிமை பற்றி ராகுல்காந்தி கூறும் போது, `தான் இங்கிலாந்து நாட்டவர் என்று குறிப்பிட்டிருக்கிறார். பிரிட்டிஷ் குடிமகனாக இருப்பவர் சட்டப்படி தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே, ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும்.

இவ்வாறு வழக்கறிஞர் அசோக் பாண்டே கூறினார்.

இதற்கிடையே வேட்பு மனுக்கள் பரிசீலனை கடந்த 4-ந்தேதி முடிந்து விட்டது. அப்போது ராகுல் மனு ஏற்கப்பட்டது.

இன்று மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள். இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் தாமதமாக புகார் கொடுத்ததால் ராகுல் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News