இந்தியா

230 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்வீர்களா?: பா.ஜ.க.வை சாடிய காங்கிரஸ்

Published On 2024-06-11 12:15 GMT   |   Update On 2024-06-11 12:15 GMT
  • மோடி பிரதமராக இருக்கும்வரை பா.ஜ.க.வின் பாராளுமன்ற ஜனநாயக அணுகுமுறை மாறாது என்றார்.
  • இம்முறை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 230 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்வார்களா என கேள்வி எழுப்பினார்.

புதுடெல்லி:

சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜன்நாயக கூட்டணி 290-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. 230-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்றுள்ளது. பிரதமருடன் சேர்த்து மொத்தம் 72 பேர் மந்திரிகளாக பதவியேற்றனர்.

இந்நிலையில், அசாம் மாநில காங்கிரஸ் எம்.பி.யும் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கவுரவ் கோகாய் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முழு காலத்துக்கும் நீடிக்காது.

மோடியின் தலைமை பாணி அவர் 5 ஆண்டுகளை வெற்றிகரமாக முடிப்பார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.

இலாகா ஒதுக்கீட்டில் தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் பேரம் பேசவில்லை என நான் நினைக்கவில்லை. அவர்கள் இருவரும் சாதுர்யமிக்க அரசியல் தலைவர்கள். அவர்களின் உண்மையான நோக்கம் என்ன என்பதை காலம்தான் சொல்லும்.

எதிர்க்கட்சி எம்.பி.க்களை இடைநீக்கம் செய்வது, தகுதிநீக்கம் செய்வது, அவர்களை வேட்டையாடுவது என தொடர்ந்து ஆளும் தரப்பு முயலும்.

இப்போது 230-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் எதிர்தரப்பில் இருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் 230 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்வார்களா? அவர்களின் அணுகுமுறை மாறாது.

ஆளும் கட்சி மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுமானால் நாங்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம். இதைத்தான் பொதுமக்கள் எங்களிடம் எதிர்பார்க்கிறார்கள். அதற்காகத்தான் பொதுமக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News