இந்தியா

தொகுதி பங்கீடு இழுபறி: இரண்டு காங்கிரஸ் தலைவர்கள் ஜம்மு-காஷ்மீர் விரைவு

Published On 2024-08-26 06:33 GMT   |   Update On 2024-08-26 06:33 GMT
  • காங்கிரஸ்- தேசிய மாநாடு கட்சி இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளது.
  • நாளை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் தொகுதி பங்கீடு இழுபறி முடிவுக்கு வர வேண்டிய கட்டாயம்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1-ந்தேதி என மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ்- பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாடு கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.

90 தொகுதிகளிலும கூட்டணியாக போட்டியிடுவோம் என பரூக் அப்துல்லா ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி பெறவில்லை.

காங்கிரஸ் மேலிடம் ஏற்கனவே தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் அதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளது. ஆனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை உறுதி செய்யாததால் அறிவிப்பை தள்ளிப் போட்டுள்ளது.

நாளையுடன் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. இதனால் உடனடியாக தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் மேலிடம் கே.சி. வேணுகோபால், சல்மான் குர்ஷித் ஆகியோரை ஜம்மு-காஷ்மீருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இருவரும் தேசிய மாநாடு கட்சி தலைவர்கள் பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள. பேச்சுவார்த்தையின் இறுதியில் இரு கட்சிகளும் போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும்.

முன்னதாக, காங்கிரஸ் தேசிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் தேசிய தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கூட்டணி உருவானது. ஆனால் தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்து வருகிறது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து இடங்களை கொடுக்க தேசிய மாநாடு கட்சி தயாராக உள்ளது. ஜம்மு பகுதயிில் 28 முதல் 30 இடங்களை கொடுக்க தயாராக இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி தேசிய மாநாடு கட்சியின் கோட்டையாக விளங்கும் சில தொகுதிகளை கேட்பதாக தெரிகிறது.

Tags:    

Similar News