இந்தியா

தேசிய கொடியுடன் சித்தராமையாவின் 'ஷூ'வை கழற்றிய காங்கிரஸ் தொண்டர்

Published On 2024-10-03 01:46 GMT   |   Update On 2024-10-03 01:48 GMT
  • முதல்-மந்திரி சித்தராமையா தேசிய கொடியை அவமதித்து விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
  • வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

பெங்களூரு குமரகிருபா ரோட்டில் உள்ள காந்திபவனில் இருந்து விதானசவுதாவுக்கு காந்தி ஜெயந்தியையொட்டி காங்கிரஸ் சார்பில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் இந்த நடைபயணம் நடந்தது.

இதில், துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் திரளாக கலந்து கொண்டார்கள். காந்திபவனில் இருந்து நடைபயணம் தொடங்கிய போது, அங்குள்ள காந்தி சிலைக்கு மலர் தூவி சித்தராமையா மரியாதை செலுத்தினார்.

இதற்காக அவர் தனது காலில் அணிந்திருந்த 'ஷூ'வை கழற்றுவதற்கு முயன்றார். ஆனால் முதல்-மந்திரியால் கீழே குனிந்து 'ஷூ'வின் லேஷ் கயிற்றை கழற்றுவதற்கு முடியாமல் போனது.

அந்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர், 'ஷூ'வின் கயிற்றை கழற்ற முயன்றார். அந்த தொண்டரின் கையில் சிறிய தேசிய கொடி இருந்தது. இதனால் ஒரு கையில் தேசிய கொடியை பிடித்து கொண்டும், மற்றொரு கையில் சித்தராமையாவின் 'ஷூ'வை கழற்றும் வேலையில் தொண்டர் ஈடுபட்டார். இதனால் தொண்டரின் கையில் இருந்த தேசிய கொடி, முதல்-மந்திரி சித்தராமையாவின் 'ஷூ'வின் மீது படும்படியாக இருந்தது.

இதனை கவனித்த மற்றொரு தொண்டர், சித்தராமையா 'ஷூ'வில் படும் படியாக இருந்த தேசிய கொடியை தனது கையில் வாங்கிக் கொண்டார். இதனை முதல்-மந்திரி சித்தராமையாவும் கவனிக்கவில்லை.

ஆனால் முதல்-மந்திரி சித்தராமையா தேசிய கொடியை அவமதித்து விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அந்த தேசிய கொடியை கையில் வைத்துக்கொண்டு 'ஷூ'வை கழற்றிய தொண்டர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வலுத்து வருகிறது.

இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. இந்த விவகாரம் முதல்-மந்திரி சித்தராமையா மீது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News