இதற்காகவா பெற்ற குழந்தைகளை விற்பார்கள்?
- தொடர்ந்து போதை மருந்து வாங்க தம்பதியிடம் பணம் இல்லை
- சகோதரனின் செயல் தெரிய வந்ததும் ரூபினா காவல்துறையிடம் புகார் அளித்தார்
மும்பையை சேர்ந்த ஷப்பீர் கான் மற்றும் சானியா தம்பதியினருக்கு ஒரு அழகான 2 வயது ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் ஒரு மாதம் முன்பு சானியா, ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
இத்தம்பதியினருக்கு போதை மருந்து எடுத்து கொள்ளும் பழக்கம் இருந்தது. ஆனால், தொடர்ந்து போதை பொருட்களை வாங்க இவர்களிடம் போதுமான அளவு பணம் இல்லை.
இந்நிலையில் இவர்களுக்கு, குழந்தையை விற்க விரும்பும் பெற்றோரிடம் இருந்து குழந்தைகளை வாங்கி, குழந்தை இல்லாத தம்பதியினருக்கு விற்கும் இடைத்தரகராக செயல்படும் உஷா ரத்தோட் என்பவர் அறிமுகமானார்.
உஷா மூலம் தங்கள் ஆண் குழந்தையை ரூ.60 ஆயிரத்திற்கு ஷக்கீல் தம்பதியினர் விற்று விட்டனர். அவர் மூலமாகவே தங்கள் பெண் குழந்தையையும் ரூ.14 ஆயிரத்திற்கு ஷகீல் மக்ரானி என்பவருக்கு விற்று விட்டனர்.
ஷப்பீரின் சகோதரி ரூபினா கானுக்கு போதை மருந்து வாங்க ரூ.74 ஆயிரத்திற்கு தங்கள் குழந்தைகளை தன் சகோதரன் விற்றது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக இது குறித்து டி.என். நகர் காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.
இதை தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மும்பை குற்றவியல் பிரிவிடம் வழக்கை மாற்றம் செய்தனர். அவர்கள் சட்டவிரோதமாக குழந்தைகளை விற்ற வழக்கில் ஷபீர், சானியா, ஷகீல் மற்றும் இடைத்தரகர் உஷா ஆகியோரை கைது செய்தனர்.
பெண் குழந்தையை மீட்டுள்ள காவல்துறையினர், ஆண் குழந்தையை வாங்கியவரை தேடி வருகின்றனர்.