காங்கிரஸ் திடீர் பல்டி: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் இந்தியா கூட்டணி பங்கேற்பதாக அறிவிப்பு
- வாக்குப்பதிவு முடிந்ததும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படும்.
- இந்த கருத்துக் கணிப்புகளை அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்வது வழக்கம்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. கடைசி கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து கருத்து கணிப்பு வெளியிட தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடைசி கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை செய்தி நிறுவன தொலைக்காட்சிகள் வெளியிடும். அப்போது கட்சித் தலைவர்களை அழைத்து விவாதங்கள் நடத்தப்படும். அப்போது கருத்துக் கணிப்பு குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் அவர்கள் கட்சி சார்பாக பேசுவார்கள்.
இதற்கிடையே, இந்த விவாதங்களில் எங்கள் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள் என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கெரா தெரிவித்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெரா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தொடர்பான் டிவி விவாதங்களில் இந்தியா கூட்டணி கட்சிகள் பங்கேற்கும். ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என பதிவிட்டுள்ளார்.
24 மணி நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் திடீர் பல்டியால் டெல்லி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.