உரிமையாளரை தாக்கி அடகு கடையில் 8 கிலோ தங்கம் கொள்ளை: கூட்டாளியுடன் ஊழியர் கைது
- நள்ளிரவில் நகை கடைக்குள் நுழைந்த சூரஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கடையில் இருந்த நகைகளை கொள்ளையடித்தனர்.
- மும்பையில் பதுங்கி இருந்த சூரஜ்குமார் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பதி:
மகாராஷ்டிரா மாநிலம், சாங்வி நகரை சேர்ந்தவர் ராம்தேவ். இவர் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், தனுகுவில் தங்கத்தை உருக்கி நகை செய்தல், அடகு கடை மற்றும் பைனான்ஸ் நடத்தி வந்தார்.
ராம்தேவ் நகை கடையில் மகாராஷ்டிராவை சேர்ந்த சூரஜ் குமார் என்பவர் வேலை செய்து வந்தார்.
சூரஜ் குமார், ராம்தேவ் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் நட்பாக பழகினார். இதனால் ராம்தேவ் குடும்பத்தினர் சூரஜ் குமாரை தனது குடும்பத்தில் ஒருவராக நினைத்து வீட்டுக்குள் அனுமதித்தனர்.
இதனால் சூரஜ்குமார் ராம்தேவ் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். வீட்டில் எவ்வளவு நகை, பணம் உள்ளது எந்த அறையில் வைக்கப்பட்டுள்ளது என்ற விவரங்கள் சூரஜ் குமாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து சூரஜ் குமார் சமீபத்தில் சொந்த ஊரான சாங்லிக்கு சென்றார். தனது நண்பர்களான நிதின் பாண்டுரங்க ஜாதவ், ஓம்கார் ஜாதவ் ஆகியோருடன் சேர்ந்து முதலாளி வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டனர்.
சூரஜ்குமார் தனது நண்பர்கள் 4 பேருடன் தனுகுவிற்கு வந்தார். நள்ளிரவில் நகை கடைக்குள் நுழைந்த சூரஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கடையில் இருந்த நகைகளை கொள்ளையடித்தனர்.
பின்னர் முகமூடி அணிந்து முதலாளி வீட்டிற்கு சென்ற சூரஜ் குமார் கும்பல், ராம்தேவ் மற்றும் அவரது மனைவி குழந்தைகளை சரமாரியாக தாக்கினர்.
பீரோவை உடைத்து அதிலிருந்து நகை, பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி சென்றனர். மொத்தம் 8 கிலோ தங்கம் கொள்ளை போனது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சூரஜ் குமார் தலைமையிலான கும்பல் நகைக்கொள்ளையில் ஈடுபட்டதை போலீசார் கண்டுபிடித்தனர்.
மும்பையில் பதுங்கி இருந்த சூரஜ்குமார் உட்பட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 8 கிலோ தங்க நகைகள், பணத்தை பறிமுதல் செய்தனர்.