இந்தியா

மும்பை தனியார் நிறுவனத்தில் அமலாக்கதுறை சோதனை: ரூ.975 கோடி மோசடி

Published On 2024-06-28 05:56 GMT   |   Update On 2024-06-28 05:56 GMT
  • ரூ.975.08 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
  • பங்குகள் மற்றும் பத்திரங்கள் முடக்கப்பட்டுள்ளன.

மும்பை:

மராட்டிய மாநிலம் மும்பையை தலைமை இடமாக கொண்டு மந்தனா என்ற பெயரில் ஜவுளி தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இந்த நிறுவனத்தின் அதிபர் மற்றும் செயல் இயக்குனர்கள் அங்குள்ள பரோடா வங்கியில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் கடன் பெற்றனர். ஆனால் இந்த கணக்கு 2016-ம் ஆண்டு செயல்படாத சொத்தாக அறிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட தணிக்கையில் அந்த நிறுவனம் ரூ.975.08 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் புருஷோத்தம் சகன்லால் மந்தனா, முன்னாள் நிர்வாக இயக்குனர் மணீஷ் பிஹாரிலால் மந்தனா உள்ளிட்டோர் மீது வங்கி நிர்வாகம் சி.பி.ஐ.யில் புகார் செய்தது.

புகாரின் பேரில் மந்தனா நிறுவனத்தின் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மந்தனா நிறுவனத்துடன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் மும்பை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது 140-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள், 5 லாக்கர்கள் மற்றும் ரூ.5 கோடி மதிப்புள்ள பங்குகள் மற்றும் பத்திரங்கள் முடக்கப்பட்டுள்ளன.

மேலும் லெக்சஸ் மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட 3 உயர்ரக கார்களும் ரோலக்ஸ், ஹூப்லாட் போன் பிரபல பிராண்டுகளின் கைக்கடிகா ரங்கள் மற்றும் ஏராளமான டிஜிட்டல் சாதனங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News