வரலாற்றிலேயே முதல் முறையாக பாராளுமன்ற தேர்தல் காலத்தில் ரூ.1,100 கோடி பணம், நகை பறிமுதல்
- இதுவரை இல்லாத அளவுக்கு நகை மற்றும் பணம் சிக்கியிருக்கிறது.
- டெல்லி மற்றும் கர்நாடகா மாநிலங்கள் முதலிடம் பிடித்துள்ளன.
புதுடெல்லி:
வரலாற்றிலேயே முதல் முறையாக நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் ரூ.1,100 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணத்தை வருமான வரித்துறை பறிமுதல் செய்து சாதனை படைத்து இருக்கிறது.
நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்களின்போது வாக்காளர்களுக்கு பணம், மது, ேபாதைப்பொருட்கள், நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் என இலவசங்களை வழங்குவதை தடுக்க தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இந்த படையினர் கணக்கில் வராத பணம் மற்றும் பொருட்களை எடுத்துச்செல்வோரிடம் இருந்து அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.
அந்தவகையில் தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற தேர்தல் காலத்திலும் இந்த சோதனை நடவடிக்கைகள் நடந்தது. தேர்தல் அறிவிக்கப்பட்ட கடந்த மார்ச் 16-ந்தேதி முதல் மத்திய விசாரணை அமைப்புகள் இந்த கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டன.
வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற இந்த மத்திய விசாரணை அதிகாரிகள், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு சென்றவர்களிடம் இருந்து அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
தேர்தல் கமிஷனின் இந்த கண்டிப்பான நடவடிக்கைகளால் இதுவரை இல்லாத அளவுக்கு நகை மற்றும் பணம் இந்த முறை சிக்கியிருக்கிறது.
அந்தவகையில் கடந்த மார்ச் 16-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை ரூ.1,100 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
இவ்வளவு அதிகமான பணம் மற்றும் நகை சிக்கியிருப்பது இந்திய தேர்தல் வரலாற்றிலேயே முதல் முறை ஆகும். கடந்த தேர்தலை ஒப்பிடும்போது இது 182 சதவீதம் அதிகம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். அந்தவகையில் கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ரூ.309 கோடி மதிப்பிலான நகை-பணம் சிக்கியிருந்தது.
இந்த ஆண்டு அதிக பணம் மற்றும் பொருட்கள் சிக்கியதில் டெல்லி மற்றும் கர்நாடகா மாநிலங்கள் முதலிடம் பிடித்துள்ளன. இந்த மாநிலங்களில் தலா ரூ.200 கோடிக்கு அதிகமான பணம் மற்றும் நகைகள் சிக்கியுள்ளன.
ரூ.150 கோடிக்கு அதிகமான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட தமிழ்நாடு 2-ம் இடத்தை பிடித்து இருக்கிறது. ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில் கூட்டாக ரூ.100 கோடிக்கு அதிகமான பணம் மற்றும் பொருட்கள் சிக்கியிருக்கின்றன.
நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1,100 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகை பறிமுதல் செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.