இந்தியா

ஆந்திரா சட்டசபை தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு

Published On 2024-05-13 02:35 GMT   |   Update On 2024-05-13 02:35 GMT
  • ஆந்திராவில் 175 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
  • முன்னாள் முதல் மந்திரியான சந்திரபாபு நாயுடு குண்டூர் தொகுதியில் வாக்களித்தார்.

அமராவதி:

ஆந்திர மாநில சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அங்கு ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் 175 சட்டபை தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது.

முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக பிரபல நடிகரான பவன் கல்யாணுடன் கூட்டணி அமைத்துள்ளார் சந்திரபாபு நாயுடு. மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுடனும் கூட்டணி அமைத்தார்.

கூட்டணி பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தெலுங்கு தேசம் 144 சட்டசபை தொகுதிகளிலும், பவன் கல்யாண் கட்சியான ஜனசேனா 21 சட்டசபை தொகுதிகளிலும், பா.ஜ.க. 10 சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

மற்றொரு முக்கிய கட்சியான காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்தியா கூட்டணியும் களத்தில் உள்ளது.

இந்நிலையில், ஆந்திர மாநில சட்டசபை தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். முன்னாள் முதல் மந்திரியான சந்திரபாபு நாயுடு குண்டூர் தொகுதியில் வாக்களித்தார்.

இதேபோல், ஒடிசா மாநிலத்திலும் சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News