மாட்டு மந்தைபோல ஆற்றைக்கடக்கும் யானைக்கூட்டம்: வீடியோ வைரல்
- யானைக்கூட்டம் ஒன்று நீந்திக் கடக்கும் அபூர்வ வீடியோ.
- பிரம்மபுத்திரா ஆற்றில் டிரோன் உதவியுடன் படமாக்கப்பட்டுள்ளது.
ஆழமான ஆற்றை யானைக்கூட்டம் ஒன்று நீந்திக் கடக்கும் அபூர்வ வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. அது அசாமின் நிமதி கட் வனப்பகுதியில் பிரம்மபுத்திரா ஆற்றில் டிரோன் உதவியுடன் படமாக்கப்பட்டுள்ளது. புகைப்பட கலைஞர் சச்சின் பரலி இந்த அரிய காட்சியை படமாக்கி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
யானைக்கூட்டம் பொதுவாக காடுகளை கடந்து செல்வதை பார்த்து இருக்கலாம். நீர்நிலைகளுக்கு அருகில்கூட அவை பெருங்கூட்டமாக வந்து நீர்அருந்தி கடந்து செல்லும். ஆனால் அதிக எடையுடைய யானைகள் நீர்நிலைகளை அவ்வளவு எளிதில் நீந்தி கடக்க முயலாது என்று பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.
அந்த எண்ணத்தை மாற்றும் விதமாக, ஆழமான ஆற்றையும் அசாதரணமாக எங்களால் கடக்க முடியும் என்பதைப்போல, ௮௦-க்கும் மேற்பட்ட யானைகள் பெருங்கூட்டமாக பிரமாண்டமான பிரம்மபுத்திராவை நீந்திக்கடக்கின்றன. அவற்றின் முதுகு பகுதிகள் மட்டுமே மேலே தெரியும் அளவில் ஆழமான இடத்தில் அவை நீந்தி செல்லும் காட்சி பார்ப்பவர்களை வியக்க வைக்கிறது.
வழக்கமாக காட்டு மாடுகள்தான் நூற்றுக்கணக்கில் இப்படி மந்தையாக ஆற்றைக்கடக்கும் காட்சியை பார்க்க முடியும். அதுபோல அதிக எண்ணிக்கையிலான யானைக்கூட்டம் நீந்தும்காட்சி அரிதாக படம்பிடிக்கப்பட்டு இருப்பது புகைப்படக் கலைஞருக்கு பாராட்டுகளை குவித்துள்ளது. இந்த காட்சி வலைத்தளத்தில் 42 லட்சத்துக்கும் மேலானவர்களால் ரசிக்கப்பட்டு உள்ளது. 3.5 லட்சம் பேரின் விருப்பங்களை பெற்றுள்ளது.