ரூ.7 லட்சம் கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்- லிவ் இன் காதலியை கொன்று உடலை கூறுபோட்ட நபர் கைது
- கடந்த மே 12ம் தேதி, கடனாகப் பெற்ற பணத்தைத் திருப்பித் தருவது தொடர்பாக பெண்ணுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
- துர்நாற்றம் வீசாமல் இருக்க மறைத்து வைக்கப்பட்டிருந்த உடல் பாகங்களில் வாசனை திரவியம் மற்றும் பினாயில் ஊற்றி பாதுகாத்து வந்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம், ஐதரபாத்தில் உள்ள முசி ஆறு அருகே கடந்த 17ம் தேதி அன்று பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு பணியில் இருந்த உள்ளூர் குடிமைப் பணியாளர்கள் துண்டிக்கப்பட்ட தலை கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசில் தெரிவித்தனர்.
இதுகுறித்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளியையும், உடல் பாகங்களையும் கண்டுபிடிக்க 8 போலீஸ் குழுக்களை அமைத்தனர். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியையும் போலீசார் ஆய்வு செய்தனர்.
இதில், ஐதரபாத்தை சேர்ந்த 48 வயது நபர் 55 வயதான பெண்ணுடன் தகாத உறவில் இருந்ததும், ரூ.7 லட்சம் கடனை கேட்டதற்காக பெண்ணை கொலை செய்து தலையை துண்டித்து வீசியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் (தென் கிழக்கு மண்டலம்) சி.எச்.ரூபேஷ் கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்ட நபர், உள்ளூர் நிதி முகவராக இருந்த 55 வயது பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு முதல் அவர் செலுத்த வேண்டிய ரூ.7 லட்சம் பணத்தை திருப்பித் தருமாறு அந்த பெண் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மே 12ம் தேதி, கடனாகப் பெற்ற பணத்தைத் திருப்பித் தருவது தொடர்பாக பெண்ணுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நபர் பெண்ணை கத்தியால் கொடூரமாகக் குத்தி கொன்றுள்ளார்.
பின்னர், அந்த நபர் பெண்ணின் தலையை துண்டித்து, உடற்பகுதியில் இருந்து கால்கள் மற்றும் கைகள் மற்றும் உறுப்புகளை வெட்டி, தனது வீட்டில் குளிர்சாதன பெட்டியில் பாதுகாத்து வந்துள்ளார்.
பின்னர், மே 15ம் தேதி பெண்ணின் தலையை கருப்பு கவரில் வைத்து முசி ஆறு கரை அருகே உள்ள குப்பை கிடங்கில் வீசியுள்ளார்.
மேலும், அந்த நபர் தான் தங்கியிருந்த பகுதியில் துர்நாற்றம் வீசாமல் இருக்க மறைத்து வைக்கப்பட்டிருந்த உடல் பாகங்களில் வாசனை திரவியம் மற்றும் பினாயில் ஊற்றி பாதுகாத்து வந்துள்ளார்.
இந்நிலையில் போலீசாரிடம் சம்பந்தப்பட்ட நபர் கையும் களவுமாக சிக்கியுள்ளார்" என்றார்.