இந்தியா

லாலு பிரசாத் யாதவின் ஊழலை கண்டுகொள்ளாதது வெட்கக்கேடு: நிதிஷ்குமார் மீது பா.ஜனதா பாய்ச்சல்

Published On 2022-10-10 02:38 GMT   |   Update On 2022-10-10 02:38 GMT
  • 2017-ம் ஆண்டு, ஊழலுக்காக லாலுபிரசாத் யாதவிடம் இருந்து நிதிஷ்குமார் விலகினார்.
  • தற்போது, ஊழல் விவகாரத்தில் கண்ணை மூடிக்கொண்டிருப்பது வெட்கக்கேடானது

புதுடெல்லி :

ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ், ரெயில்வே மந்திரியாக இருந்தபோது, வேலை வழங்க நிலம் லஞ்சமாக கைமாறியதாக புகார் எழுந்தது. அதன்பேரில், லாலுபிரசாத், அவருடைய மனைவி ராப்ரிதேவி, மூத்த மகள் மிசார பாரதி எம்.பி. உள்பட 14 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக சி.பி.ஐ. கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

ஆனால் இதுபற்றி கருத்து தெரிவித்த பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார், ''அந்த வழக்கில் எதுவுமே வெளிவரவில்லை. நான் இப்போது அவருடன் கூட்டணியில் இருக்கிறேன். சி.பி.ஐ. தங்கள் ஆசைக்கேற்ப செயல்படுகிறது'' என்று கூறினார்.

இந்தநிலையில், நிதிஷ்குமாருக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நிதிஷ்குமார், தான் வாழ்நாளில் கட்டிக்காப்பாற்றிய முக்கிய கொள்கைகளை லாலுவையும், அவரது குடும்பத்தையும் ஊழல் வழக்கில் ஆதரித்து பேசுவதன் மூலம் சமரசம் செய்து கொண்டு விட்டார்.

2017-ம் ஆண்டு, ஊழலுக்காக லாலுபிரசாத் யாதவிடம் இருந்து நிதிஷ்குமார் விலகினார். ஆனால் அவரே தற்போது, ஊழல் விவகாரத்தில் கண்ணை மூடிக்கொண்டிருப்பது வெட்கக்கேடானது, துரதிருஷ்டவசமானது.

அவர் சட்டத்தை செயல்பட விட வேண்டும். அதில் குறுக்கிடக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News