இந்தியா

சந்திராயன் 3 விண்கலம் வரும் 14-ம் தேதி விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ அறிவிப்பு

Published On 2023-07-06 12:21 GMT   |   Update On 2023-07-06 12:24 GMT
  • சந்திராயன் 3 விண்கலம் வரும் 14-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
  • ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் ஏவப்படுகிறது.

புதுடெல்லி:

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நிலவை ஆய்வு செய்யும் பணியை தொடங்கி உள்ளது. இதற்காக கடந்த 2008-ம் ஆண்டு சந்திராயன் 1 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. அது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரத்தை உறுதி செய்தது.

இதையடுத்து, நிலவில் தரை இறங்கி ஆய்வு செய்யும் நோக்கில் சந்திராயன் 2 விண்கலம் ஏவும் திட்டத்தை தொடங்கியது. நவீன கருவிகளுடன் உருவான சந்திராயன் 2 விண்கலம் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. செப்டம்பர் மாதம் இந்த விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதையை சென்றடைந்தது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விண்கலம் நிலவில் திட்டமிட்டபடி தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது. அதே நேரம் விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்ப்பிட்டர் நிலவின் சுற்று பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

இதற்கிடையே, சந்திராயன் 3 விண்கலம் ஏவும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்றும், விரைவில் சந்திராயன் ஏவும் தேதி அறிவிக்கப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் வரும் 14-ம் தேதி மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது என இஸ்ரோ அறிவித்துள்ளது.

Tags:    

Similar News