பிபிசி அலுவலகங்களில் வருமான வரி சோதனை: மோடி அரசு மீது எதிர்க்கட்சிகள் பாய்ச்சல்
- பிரதமர் மோடி சர்வாதிகாரத்தின் உச்சத்தை எட்டியிருப்பதை காட்டுவதாக ஆம் ஆத்மி கட்சி விளாசல்
- காங்கிரஸ் ஏன் எப்போதும் தேசவிரோத சக்திகளுடன் நிற்கிறது? என பாஜக செய்தித் தொடர்பாளர் கேள்வி
புதுடெல்லி:
டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பி.பி.சி. ஊடக அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தினார்கள். பிரதமர் மோடி குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
'மோடி அரசின் கீழ் பத்திரிகை சுதந்திரம் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இது விமர்சன குரல்களை நெரிக்கும் வெட்கக்கேடான பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். எதிர்க்கட்சிகளையும் ஊடகங்களையும் தாக்குவதற்கு மத்திய நிறுவனங்களை பயன்படுத்தினால் எந்த ஜனநாயகமும் வாழ முடியாது. இதை மக்கள் எதிர்ப்பார்கள்' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி சர்வாதிகாரத்தின் உச்சத்தை எட்டியிருப்பதை வருமான வரித்துறை நடவடிக்கைகள் காட்டுவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.
"முதலில் பிபிசி ஆவணப்படங்களை தடை செய்தார்கள். பின்னர், அதானி தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை இல்லை. இப்போது பிபிசி அலுவலகங்களில் வருமான வரி சோதனைகள்... இந்தியா: ஜனநாயகத்தின் தாய்?" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் பாஜக மறுத்ததுடன், பிபிசி நிறுவனம் ஊழல் நிறுவனம் என்றும் இந்தியாவிற்கு எதிராக விஷத்தை பரப்பியதாகவும் குற்றம் சாட்டியது.
பாஜக செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறியதாவது:-
இந்தியாவில் எந்த ஒரு நிறுவனம் செயல்பட்டாலும், அது ஊடகங்களுடனோ அல்லது பிற பணிகளுடனோ தொடர்புடையதாக இருந்தாலும், அது உள்ளூர் சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டும்.
பிபிசி நிறுவனமானது இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட கருப்பு வரலாற்றை கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி பிபிசிக்கு தடை விதித்ததை காங்கிரசார் நினைவில் கொள்ள வேண்டும்.
அவர்களால் ஏன் காத்திருக்க முடியவில்லை? காங்கிரஸ் ஏன் எப்போதும் தேசவிரோத சக்திகளுடன் நிற்கிறது? இந்த வருமான வரி சோதனையானது வழக்கமான நடவடிக்கைதான். அந்த நிறுவனம் பதிலளிக்காததைத் தொடர்ந்து முன்னதாகவே நோட்டீஸ் அனுப்பப்பட்டது. வருமான வரி சோதனையானது சட்டத்திற்கு உட்பட்டே நடக்கிறது. எதிர்க்கட்சிகள் இதை அரசியலாக்கக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.