இந்தியா

சகோதரிக்கு எதிராக மனைவியை நிறுத்தியது தவறு.. அரசியல் சதுரங்கத்தில் அஜித் பவாரின் அடுத்த நகர்வு?

Published On 2024-08-14 08:00 GMT   |   Update On 2024-08-14 08:00 GMT
  • 'பாராளுமன்ற குழு முடிவு எடுத்ததால் எனது மனைவியை தேர்தலில் நிறுத்தினேன்'
  • 'கூட்டணி கட்சியினர் சரத் பவாரை விமர்சிக்கும்போது என்ன பேசுகிறோம் என்பதை புரிந்து பேச வேண்டும்'

மகாராஷ்டிர அரசியலும் மகா கூட்டணிகளும் 

மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. மாராத்தா சமூகத்தினர் இடஒதுக்கீடு பிரச்சனை , அஜித் பவார் தேசியவாத - பாஜக - ஷிண்டே சிவசேனா ஆகியோர் இடம்பெற்றுள்ள மஹாயுதி கூட்டணியில் அதிருப்தி அலை என மொத்த அரசியல் சூழல் குழப்பத்தில் உள்ளது.

சித்தப்பா சரத் பவாரின் தேசியவாத காங்கிரசை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் பாஜக பக்கம் சென்ற அவரது அண்ணன் மகன் அஜித் பவாரின் நடவடிக்கைகளை பாஜக மேலிடம் சந்தேகக் கண்களோடு கவனித்து வருகிறது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அஜித் பவார் அணி பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதும், அஜித் பவார் ஆதரவர்கள் சிலர் கொத்தாக மீண்டும் சரத் பவாரிடம் சென்றதே அதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சரத் பவார் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா ஆகியவை காங்கிரசின் இந்தியா கூட்டணியோடு இணைந்து மகா விகாஸ் கூட்டணியை உருவாக்கி களமாடி வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 48 இடங்களில் 31 இடங்களை வென்று பாஜக கூட்டணியின் நம்பிக்கையைச் சிதறடித்தது.

ஒரே கட்சிகளை சேர்ந்த இருவேறு அணிகள் எதிரெதிர் கூட்டணியில் உள்ளது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வரும் தேர்தலிலும் பிரதிபலிக்கவே செய்யும். மேலும் எப்போது யார் எந்த அணிக்கு தாவுவார்கள் என்ற நிச்சயத்தன்மை இல்லாத திரிசங்கு நிலைமையே தற்போதைய மகாராஷ்டிர அரசியல் சூழல்.

அஜித் பவாரும் குடும்ப பாசமும் 

இதற்கிடையே துணை முதல்வராக உள்ள அஜித் பவார், மக்களவைத் தேர்தலில் சகோதரி சுப்ரியா சூலேவை எதிர்த்து தனது மனைவியை நிறுத்தியிருக்கக்கூடாது என்று கூறியுள்ள கருத்து பாஜக அலுவலகத்தின் பக்கம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நடந்த முடிந்த மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே வை எதிர்த்து பாஜக கூட்டணி சார்பில் தனது மனைவி சுனேத்திர பவாரை பாராமதி தொகுதியில் நிறுத்தினார்.

ஆனால் ஏற்கனவே எம்,பியாக இருந்துவந்த சுப்ரியா சுலே இந்த தேர்தலிலும் வெற்றிபெற்றார். எனவே தோல்வியைத் தழுவிய சுனேத்திர பவாருக்கு ஆறுதல் பரிசாக மாநிலங்களவை எம்.பி பதவியை பாஜக கூட்டணி வழங்கியது. இதற்கு கட்சி சார்பில் பல எதிர்ப்புகளும் கிளம்பின.

இதற்கிடையில் தற்போது துணை முதல்வராக இருக்கும் அஜித் பவார் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பவார், ''நான் அனைத்து சகோதரிகளையும் நேசிக்கிறேன். அரசியலை வீட்டிற்குள் நுழைய விடக்கூடாது. எனது சகோதரிக்கு எதிராக எனது மனைவியை தேர்தலில் நிறுத்தி தவறு செய்துவிட்டேன். இது நடந்திருக்க கூடாது. ஆனால் பாராளுமன்ற குழு   முடிவு எடுத்ததால் எனது மனைவியை தேர்தலில் நிறுத்தினேன். ஆனால் அது தவறு என்று இப்போது நினைக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

 

மேலும் அடுத்த வாரம் ரக்ஷாபந்தனுக்கு உங்களது சகோதரி வீட்டிற்குச் செல்வீர்களா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சரத் பவார், `நான் இப்போது சுற்றுப்பயணத்தில் இருக்கிறேன். நானும், எனது சகோதரியும் ஒரே இடத்தில் இருந்தால் நிச்சயம் அவரை சந்திப்பேன் என்றார். மேலும், சரத் பவார் மூத்த தலைவர். எங்களது குடும்பத் தலைவர். அவர் கூறும் எந்த விமர்சனங்களுக்கும் பதில் அளிக்க மாட்டேன் என்று தெரிவித்தார். மேலும் தனது கூட்டணி கட்சியினர் சரத் பவாரை விமர்சிக்கும்போது என்ன பேசுகிறோம் என்பதை புரிந்து பேச வேண்டும். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது இது குறித்து பேசுவேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News