தெலுங்குதேசம், ஜனசேனா கட்சிகளை சின்னத்தை வைத்து கிண்டல் செய்த ஜெகன்மோகன் ரெட்டி
- மக்களவை தேர்தலுடன் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெறும்.
- ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்க்கு எதிராக தெலுங்குதேசம், ஜனசக்தி கட்சிகள் களம் இறங்கும் நிலையில் கிண்டல்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும், பவன்கல்யாண் ஜனசேனா கட்சியும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சட்டசபை தேர்தலில் களம் காண இருக்கின்றன. மக்களவை தேர்தல் உடன் ஆந்திர மாநில சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.
இதனால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரும், முதல்-மந்திரியுமான ஜெகன்மோகன் ரெட்டி தெலுங்கு தேசம் கட்சியை எதிர்த்து பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.
நேற்று இரவு அவர் அமராவதி மாவட்டத்தில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், "தெலுங்கு தேசம் கட்சியின் சின்னம் சைக்கிள். அதை நாம் வீட்டின் நடு அறையில் கொண்டு வைக்க முடியாது. வீட்டுக்கு வெளியில்தான் வைக்க வேண்டும்.
ஜனசக்தியின் தேர்தல் சின்னம் டீ டம்ளர். பயன்படுத்திய டம்ளர் சமையறையின் சிங்க்-ல் (sink) வைக்க வேண்டும். ஆனால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசின் சின்னம் மின் விசிறி. அது எப்போதும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். அதுபோல ஒய்.எஸ்.ஆர். காங்கிரசை வீட்டுக்குள்ளே வைத்துக்கொள்ள மக்கள் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்க்கு ஆதரவாக வாக்களிப்பார்கள். தெலுங்குதேசம், ஜனசேனாவிற்கு எதிராக வாக்களிப்பார்கள்" என்று கிண்டல் செய்தார்.