35 வருடம் இல்லாத அளவிற்கு வாக்குப்பதிவு: விரைவில் சட்டமன்ற தேர்தல்- தேர்தல் ஆணையம்
- காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ஸ்ரீநகர், பாரமுல்லா, அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு 19.16 சதவீத வாக்குகள்தான் பதிவானது.
- இந்த மூன்று தொகுதிகளிலும் தற்போது 50.86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை ஆறு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர், பாரமுல்லா, அனந்த்நாக்-ரஜோரி, உதம்பூர், ஜம்மு ஆகிய ஐந்து மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவு முடிவடைந்து விட்டது.
இந்த ஐந்து தொகுதிகளிலும் கடந்த 35 வருடங்கள் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். அதேபோல் போட்டியிடும் வாக்காளர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
இந்த அளவிற்கு தேர்தலில் பங்கேற்றுள்ளது, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில சட்டசபை தேர்தலை நடத்துவதற்கு மிகப்பெரிய அளவில் நேர்மறையானதாகும். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஜனநாயக செயல்முறை தொடர்ந்து செழித்து வருகிறது எனத் தெிவித்துள்ளார்.
ஐந்து தொகுதிகளிலும் 58.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ஸ்ரீநகர், பாரமுல்லா, அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு 19.16 சதவீத வாக்குகள்தான் பதிவானது. தற்போது 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த மூன்று தொகுதிகளிலும் 50.86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஸ்ரீநகரில் 38.49 சதவீத வாக்குகள், பாரமுல்லாவில் 59.1 சதவீத வாக்குகள், அனந்த்நாக்-ரஜோரியில் 57.84 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
உதம்பூர் தொகுதியில் 68.27 சதவீத வாக்குகளும், ஜம்முவில் 72.22 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
ஜம்மு-காஷ்மீரில் 83 சட்டமன்ற இடங்கள் 90 ஆக அதிகரித்துள்ளது. உச்சநீதிமன்றம் செப்டம்பர் மாதம் 30-ந்தேதிக்குள் சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.