இந்தியா

இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சியுடன் கூட்டணி: குமாரசாமி அறிவிப்பு

Published On 2023-05-13 02:00 GMT   |   Update On 2023-05-13 02:00 GMT
  • தனது நண்பர்கள் மூலம் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகளுக்கு தூது விட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • காங்கிரஸ், பா.ஜனதா தலைவர்கள் கூட்டணி ஆட்சி அமைக்க அரசியல் ஆட்டத்தை தொடங்கியுள்ளனர்.

பெங்களூரு :

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால் கர்நாடகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு போல் கூட்டணி ஆட்சி அமையலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதனால் தற்போதே பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் கூட்டணிக்காக ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர் தேவேகவுடா, குமாரசாமியுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேர்தல் பிரசாரத்தின் போதே தேவேகவுடா, பா.ஜனதா, காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணி தொடர்பாக தன்னுடன் பேசியதாக கூறியிருந்தார். இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பு இல்லை என கூறுகிறது. இதனால் காங்கிரஸ், பா.ஜனதா தலைவர்கள் கூட்டணி ஆட்சி அமைக்க அரசியல் ஆட்டத்தை தொடங்கியுள்ளனர்.

தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால், சுயேச்சைகள், மாற்று கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சி நடத்தவும், இது முடியாவிட்டால் ஜனதாதளம் (எஸ்) கட்சி துணையுடன் கூட்டணி அமைக்க இரு கட்சிகளும் திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகின்றன. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைவர்களும், பா.ஜனதா தலைவர்களும் தனித்தனியாக கூடி ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அதுபோல் சுயேச்சைகள், மாற்று கட்சி எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளன.

இந்த நிலையில், ஜனதாதளம் (எஸ்) கட்சி மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும், கூட்டணிக்கு எந்த கட்சி சம்மதம் தெரிவித்தாலும் எங்களின் கோரிக்கைகள், நிபந்தனைகளை உடன்படுபவர்களுடன் கூட்டணி அமைப்போம் என்றும் தனது நண்பர்கள் மூலம் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகளுக்கு தூது விட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது முதல்-மந்திரி பதவியுடன், நீர்ப்பாசனம், பொதுப்பணித்துறை, எரிசக்தி துறை உள்ளிட்ட முக்கிய இலாகாக்களை தங்களுக்கு ஒதுக்க வேண்டும். கூட்டணி ஆட்சியில் எந்த கட்சி மேலிடமும், தலைவர்களும் தலையிடக் கூடாது. கூட்டணி ஆட்சியில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கக் கூடாது. எந்த கொள்கை முடிவையும் எடுக்க தடை இருக்க கூடாது. ஜனதாதளம் (எஸ்) கட்சி கொடுத்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை எந்த எதிர்ப்பும் இன்றி நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும்.

ஜனதாதளம் (எஸ்) கட்சியின் வாக்கு வங்கிகள் அதிகமுள்ள பழைய மைசூரு பகுதிகளில் கூட்டணி கட்சியினர் தலையிடக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை குமாரசாமி விதித்துள்ளார். இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சியுடன் குமாரசாமி கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்று (சனிக்கிழமை) நடைபெறும் தேர்தல் முடிவை பொறுத்தே 3 கட்சிகளும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நோக்கி நகரும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ஓட்டுப்பதிவு நடந்த 10-ந்தேதி நள்ளிரவே குமாரசாமி சிங்கப்பூர் சென்றுள்ளார். அவர் இன்று காலை பெங்களூருவுக்கு திரும்ப உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News