இந்தியா

வயநாடு தொகுதியில் ராகுல்காந்தியை எதிர்த்து கருணாகரனின் மகள் போட்டி?

Published On 2024-03-08 06:21 GMT   |   Update On 2024-03-08 06:21 GMT
  • பத்மஜா வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும், அவர் வயநாடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
  • ஆலப்புழா தொகுதியில் கே.சி. வேணுகோபால் போட்டியிடுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

திருவனந்தபுரம்:

மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ள நிலையில், அனைத்து மாநிலங்களிலும் பாரதிய ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

மேலும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களையும் தேர்வு செய்து அறிவித்து வருகின்றனர். கேரள மாநிலத்திலும் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

அங்குள்ள 20 மக்களவை தொகுதிகளில் 16 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. பாரதிய ஜனதா கட்சி 12 தொகுதி வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. மற்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்களை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான கே. கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபால், நேற்று டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் கேரள பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் பாரதிய ஜனதாவில் இணைந்தார்.

களமச்சேரி காங்கிரஸ் தொழிலாளர்கள் சங்க தலைவராக இருந்து வந்த நிலையில், அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தன்னை காங்கிரசார் அவமதித்துவிட்டனர், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது தோல்விக்கு காங்கிரஸ் கட்சியினரே காரணம், சுயமரியாதையுடன் செயல்பட முடியாத நிலை காங்கிரசில் இருக்கிறது என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் கூறினார்.

பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த பத்மஜாவுக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் பத்மஜா வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும், அவர் வயநாடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

சாலக்குடி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பத்மஜா போட்டியிடலாம் என்று கூறப்பட்டாலும், வயநாடு தொகுதியில் அவர் போட்டியிடுவது தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பாரதிய ஜனதா கட்சி கருதுகிறது. இதனால் வயநாடு தொகுதியிலேயே அவர் போட்டியிடலாம் என தெரிகிறது.

திருச்சூர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடிகர் சுரேஷ் கோபி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் கேரள மாநில தலைவர் கே. முரளீதரன் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஆலப்புழா தொகுதியில் கே.சி. வேணுகோபால் போட்டியிடுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Tags:    

Similar News