இந்தியா

குண்டு வீச்சில் சேதமடைந்த பகுதிகளை பார்வையிடும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள்

மார்க்சிஸ்டு அலுவலகத்தில் வெடிகுண்டு வீச்சு- கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு

Published On 2022-07-01 05:25 GMT   |   Update On 2022-07-01 05:25 GMT
  • குண்டு வீசிய நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தது தெரியவந்தது. அவர்கள் தலையில் ஹெல்மெட் அணிந்திருந்தனர்.
  • மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அலுவலகம் மீது குண்டு வீசப்பட்ட தகவல் அறிந்ததும் அங்கு ஏராளமான தொண்டர்கள் திரண்டனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஏ.கே.ஜி.சென்டரில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை அலுவலகம் உள்ளது.

இந்த அலுவலகத்தில் நேற்று இரவு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இருந்தனர்.நள்ளிரவு நேரத்தில் அலுவலக வாசல் முன்பு பயங்கர சத்தம் கேட்டது.

அலுவலகத்தில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டிருப்பதை கண்டனர். குண்டு வீச்சில் கட்டிடத்தின் வெளிப்புற பகுதியும், கண்ணாடி ஜன்னலும் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

குண்டு வீசிய நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தது தெரியவந்தது. அவர்கள் தலையில் ஹெல்மெட் அணிந்திருந்தனர். இதனால் அவர்களை உடனடியாக அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையே தகவல் அறிந்து போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் வந்தனர். அவர்கள் அங்கு சோதனை நடத்தினர். இதில் அலுவலகத்தின் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் வெடிக்காத ஒரு நாட்டு வெடிகுண்டு இருந்ததை கண்டுபிடித்தனர். அதனை அப்புறப்படுத்திய நிபுணர்கள், வெடிகுண்டு வீசிய நபர்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அலுவலகம் மீது குண்டு வீசப்பட்ட தகவல் அறிந்ததும் அங்கு ஏராளமான தொண்டர்கள் திரண்டனர். இதனால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

இந்த சம்பவத்திற்கு காங்கிரசாரே காரணம் என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் குற்றம்சாட்டினர். அவர்களை கைது செய்யக்கோரி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதற்கிடையே ஆலப்புழாவில் உள்ள இந்திரா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது. இதற்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் இளைஞர் அமைப்பினரே காரணம் என்று காங்கிரசார் கூறினர். அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் கேரளா முழுவதும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News