சபரிமலை புதிய மேல்சாந்தியாக அருண்குமார் நம்பூதிரி தேர்வு
- பந்தளம் அரண்மனை குழந்தைகள் ரிஷிகேஷ் வர்மா, வைஷ்ணவி ஆகியோர் புதிய நம்பூதிரிகளுக்கான சீட்டை எடுத்தனர்.
- கொல்லம் சக்திகுளங்கரா பகுதியை சேர்ந்த இவர் ஆட்டுக்கல் கோவிலின் முன்னாள் மேல்சாந்தி ஆவார்.
திருவனந்தபுரம்:
சபரிமலை அய்யப்பன் கோவில் மற்றும் மாளிகைபுரம் கோவிலுக்கான மேல்சாந்திகள் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக தேர்வு செய்யப்படுவார்கள். அதேபோல் இந்த ஆண்டும் புதிய மேல்சாந்திகள் தேர்வு நடந்தது. தேர்வு பட்டியல் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 25 பேரும், மாளிகைபுரம கோவிலுக்கு 15 பேரும் இடம் பெற்றிருந்தனர்.
இந்நிலையில் புதிய மேல்சாந்திகள் தேர்வு சபரிமலையில் இன்று நடந்தது. தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, கண்டரரு பிரம்மதத்தன், தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த், உறுப்பினர்கள் அஜிகுமார், சுந்தரேசன், சிறப்பு ஆணையர் ஜெயகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் குலுக்கல் நடந்தது.
பந்தளம் அரண்மனை குழந்தைகள் ரிஷிகேஷ் வர்மா, வைஷ்ணவி ஆகியோர் புதிய நம்பூதிரிகளுக்கான சீட்டை எடுத்தனர். அதில் அய்யப்பன் கோவில் மேல்சாந்தியாக அருண்குமார் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். கொல்லம் சக்திகுளங்கரா பகுதியை சேர்ந்த இவர் ஆட்டுக்கல் கோவிலின் முன்னாள் மேல்சாந்தி ஆவார்.
இதேபோன்று மாளிகைபுரம் கோவில் மேல்சாந்தியாக வாசுதேவன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். இவர் கோழிக்கோட்டை சேர்ந்தவர் ஆவார். புதிய மேல்சாந்திகள் இருவரும் நவம்பர் 15-ந்தேதி பதவியேற்றுக் கொள்வார்கள்.