இந்தியா

அவசர நிலை மூலம் ஜனநாயகத்தை காங்கிரஸ்தான் கொலை செய்தது: கிரண் ரிஜிஜூ விமர்சனம்

Published On 2023-04-01 02:28 GMT   |   Update On 2023-04-01 02:28 GMT
  • வெளிநாட்டில் இருந்து நமக்கு ஆதரவு தேவையில்லை.
  • நமது போர், நமக்கு சொந்தமானது.

புதுடெல்லி :

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு எதிரான தீர்ப்பையும், எம்.பி. பதவி பறிப்பையும் கவனத்தில் கொண்டுள்ளதாக ஜெர்மனி வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறியிருந்தார்.

அவரது கருத்தை வரவேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் நன்றி தெரிவித்தார். அவருக்கு கண்டனம் தெரிவித்து பா.ஜனதா தலைவர்களும், ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் தலைவர்களும் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ, ராகுல்காந்திக்கு எதிராக புதிய தாக்குதலை தொடுத்தார். அவர் கூறியதாவது:-

1975-ம் ஆண்டு (அவசர நிலை) இந்திய ஜனநாயகம் காங்கிரஸ் கட்சியால் உண்மையிலேயே கொலை செய்யப்பட்டது. அப்போது யாரும் வெளிநாட்டில் அழுது புலம்பி, இந்திய உள்விவகாரங்களில் தலையிடுமாறு கேட்டது இல்லை.

இந்தியர்களே போராடி ஜனநாயகத்தை நிலைநிறுத்தினர். ஏனென்றால் இந்தியர்களின் மனதிலும், ஆன்மாவிலும் ஜனநாயகம் உயிர் வாழ்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே ஜெர்மனி செய்தித்தொடர்பாளரின் கருத்துக்கு நன்றி தெரிவித்த திக்விஜய்சிங்குக்கு மாநிலங்களவை எம்.பி. கபில்சிபல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கபில்சிபல், கடந்த ஆண்டு காங்கிரசில் இருந்து விலகினார். சமாஜ்வாடி கட்சி ஆதரவுடன், மாநிலங்களவை சுயேச்சை எம்.பி. ஆனார்.

கபில்சி பல் கூறியதாவது:-

ஜெர்மனியின் கருத்துக்கு நன்றி தெரிவித்து இருந்தீர்கள். எனது கருத்து என்னவென்றால், நாம் முன்னேறி செல்ல ஊன்றுகோல் தேவையில்லை. வெளிநாட்டில் இருந்து நமக்கு ஆதரவு தேவையில்லை.

ஏனென்றால் நமது போர், நமக்கு சொந்தமானது. அந்தவகையில் ஒன்றாக இருப்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News