இந்தியா

மகாபாரத போர்க்களத்தை பார்க்க போகிறீர்கள்: மஹுவா மொய்த்ரா

Published On 2023-12-08 07:06 GMT   |   Update On 2023-12-08 07:06 GMT
  • பணம், பரிசுப் பொருட்கள் பெற்றுக் கொண்டு கேள்வி கேட்டதாக குற்றச்சாட்டு.
  • நெறிமுறைக்குழு 500 பக்க அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்துள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பெற்றுக்கொண்டு அதானி குழுமத்திற்கு எதிராக கேள்விகள் கேட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும், மக்களவை உறுப்பினருக்கு லாக்கின் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை வெளியில் உள்ள நபருக்கு வழங்கி பாராளுமன்ற இணைய தளத்தை பயன்படுத்த அனுமதித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக மக்களவையின் நெறிமுறைக்குழு விசாரணை நடத்தியது. சுமார் 500 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையில் மொய்த்ராவின் செயல் மிகவும் ஆட்சேபனைக்குரிய, நெறிமுறையற்ற, கொடூரமான மற்றும் குற்றவியலானது என நெறிமுறைக்குழு தெரிவித்தது. அத்துடன் எம்.பி. பதவியில் இருந்த நீக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது.

தற்போது குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மக்களவையில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தகவல் வெளியானது. எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் அவை தொடங்கியதும் பா.ஜனதாவின் விஜய் சோங்கர் அறிக்கையை தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அறிக்கை மீது விவாதம் நடைபெற்று வாக்குகள் அடிப்படையில் பதவி நீக்கம் செய்யப்படலாம்.

இந்த நிலையில் இன்று காலை பாராளுமன்றத்திற்கு வந்த மஹுவா மொய்த்ரா, "துர்கா தேவி வந்தாள்! தற்போது நாம் பார்ப்போம். அழிவு வரும்போது, முதலில் மனசாட்சிதான் அழிகிறது. அவர்கள் வஸ்த்ரஹாரனை (பாஞ்சாலியின் துயில் உரிதல்) தொடங்கிவிட்டார்கள். தற்போது நீங்கள் மகாபாரத போர்க்களத்தை பார்ப்பீர்கள்." எனத் தெரிவித்தார்.

குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்த நாளில் இருந்தே மஹுவா மொய்த்ரா அதை தொடர்ந்து மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News