தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்காவிட்டால்.. மக்களை மிரட்டும் பா.ஜ.க- மம்தா குற்றச்சாட்டு
- வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் இருப்பதை உறுதி செய்ய வலியுறுத்தல்.
- நான் ராமாயணம், குரான், பைபிள், குரு கிரந்த சாகிப் போன்றவற்றைப் பின்பற்றுகிறேன்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக கட்சிக்கு வாக்களிக்காவிட்டால், மத்திய புலனாய்வு அமைப்புகளை தங்கள் வீடுகளுக்கு அனுப்புவோம் என்று பாஜக மக்களை அச்சுறுத்துவதாக குற்றம்சாட்டினார்.
மேலும், குடியுரிமை (திருத்தம்) சட்டம் அல்லது சிஏஏவில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் இருப்பதை உறுதி செய்யுமாறு கூச் பெஹாரில் உள்ள உள்ளூர் மக்களுக்கு, குறிப்பாக ராஜ்பன்ஷிகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைமை அறிவுறுத்தியது.
இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறுகையில்," பாஜக, மத்திய அமைப்புகளை தேர்தலுக்கு பயன்படுத்துகிறது. பா.ஜ.க கட்சிக்கு வாக்களிக்காவிட்டால், அமலாக்க இயக்குநரகம் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) ஆகியோரை தங்கள் வீட்டிற்கு அனுப்புவோம் என்று தொலைபேசியில் மக்களை மிரட்டுகிறது.
நான் ராமாயணம், குரான், பைபிள், குரு கிரந்த சாகிப் போன்றவற்றைப் பின்பற்றுகிறேன். வெளியில் இருந்து கொண்டு வரும் உணவை சாப்பிடுவதற்காக ஏழைகளின் வீடுகளுக்குச் சென்று நாடகம் ஆடுவதில்லை" என்றார்.