இந்தியா (National)

மணிப்பூர் பெண்கள் மீதான வன்முறை- கைதான குற்றவாளியின் வீடு தீ வைத்து எரிப்பு

Published On 2023-07-21 05:43 GMT   |   Update On 2023-07-21 05:43 GMT
  • இன்று 3-வது நாளாக போராட்டம் நீடிப்பதால் மணிப்பூரில் பதட்டம் அதிகரித்துள்ளது.
  • பிடிபட்டவர்கள்தான் கும்பலாக சென்று குகி இனத்தவர்கள் கிராமத்தை சூறையாடியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இம்பால்:

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்கள் சுமார் 53 சதவீதம் பேர் உள்ளனர். அதுபோல குகி இனத்தை சேர்ந்தவர்கள் சுமார் 40 சதவீதம் பேர் உள்ளனர்.

இவர்களில் குகி இனத்தவர்களுக்கு பழங்குடியின அந்தஸ்து இருக்கிறது. அதேபோன்று தங்களுக்கும் பழங்குடியின அந்தஸ்து வேண்டும் என்று மைதேயி சமூகத்தினர் போராடி வருகின்றனர்.

மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியின அந்தஸ்து கொடுக்கக்கூடாது என்று குகி இனத்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு சமூகத்தினர் இடையே கடந்த மே மாதம் 3-ந் தேதி மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. அது மணிப்பூர் மாநிலம் முழுவதும் கலவரமாக மாறியது. அதில் 150-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

மறுநாள் (அதாவது மே 4-ந் தேதி) குகி இனத்தவர்கள் வாழும் ஒரு கிராமத்துக்குள் புகுந்த சுமார் 1000 பேர் கொண்ட மைதேயி இனத்தவர்கள் மிக மோசமாக வன்முறையில் ஈடுபட்டனர். குகி இனத்தை சேர்ந்த 2 பெண்களை ஆடைகள் இன்றி ஊர்வலமாக இழுத்து சென்றனர்.

அவர்களை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்திய கொடூரமும் அரங்கேறியது. அதை தடுத்த 2 பேர் கொல்லப்பட்டனர்.

2 பெண்கள் மீதான பாலியல் கொடூரம் பற்றிய வீடியோ காட்சிகள் நேற்று முன்தினம் திடீரென வெளியானது. 26 விநாடிகள் ஓடும் அந்த வீடியோ காட்சியில் 2 பெண்கள் ஆடைகள் இன்றி கொடுமைப்படுத்தப்படும் காட்சிகள் மனதை நொறுக்குவதாக இருந்தது. நாடு முழுவதும் இந்த வீடியோ காட்சி வைரலாக பரவி மாபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சுப்ரீம் கோர்ட்டு இதுதொடர்பாக தாமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களை வேட்டையாடும் பணியில் மணிப்பூர் போலீசார் ஈடுபட்டனர். வீடியோ காட்சியை வைத்து விசாரணை நடந்தது.

பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அழைத்து செல்லும் முக்கிய நபரான ஹூப்ரீம் ஹிரதாஷ் சிங் கைது செய்யப்பட்டார். நேற்று மதியம் மேலும் 3 பேர் போலீசாரிடம் பிடிபட்டனர். அவர்களை தனி இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாக மணிப்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான 4 பேருக்கும் அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்க பரிந்துரைப்பது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது. மணிப்பூர் மாநில முதல்-மந்திரி பைரேன்சிங் இதற்கான பரிந்துரையை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மணிப்பூரில் மைதேயி இனத்தவர்களின் பாலியல் கொடூரத்தை கண்டித்து குகி இனத்தவர்கள் நேற்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் குகி இன மக்கள் கருப்புச்சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவும் தீ பந்தம் ஏந்தி போராட்டம் நடந்தது.

சில இடங்களில் விடிய விடிய குகி இன மக்கள் போராட்டம் செய்தனர். இன்று 3-வது நாளாக போராட்டம் நீடிப்பதால் மணிப்பூரில் பதட்டம் அதிகரித்துள்ளது. இதையடுத்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான ஹூப்ரீம் ஹிரதாஷ் சிங் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது. நேற்று இரவு அவனது வீட்டை சூழ்ந்த மர்ம மனிதர்கள் பெட்ரோல் வீசி தீ வைத்து எரித்தனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.

வீடியோவில் இடம் பெற்றுள்ள கும்பலில் உள்ளவர்களில் பலர் தலைமறைவாகி விட்டனர். இன்று காலை வரை 657 பேரை பிடித்து விசாரித்து வருவதாக மணிப்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர். பிடிபட்டவர்கள்தான் கும்பலாக சென்று குகி இனத்தவர்கள் கிராமத்தை சூறையாடியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களிடம் நடத்தப்படும் விசாரணை மூலம மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களது வீடுகள் மற்றும் உடமைகள் மர்ம மனிதர்களால் தாக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இது மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கும் இடையேயான மனக்கசப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

Tags:    

Similar News