இந்தியா

இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வி: போராட்டத்தை தொடரும் டாக்டர்கள்

Published On 2024-09-18 23:50 GMT   |   Update On 2024-09-18 23:50 GMT
  • நேற்று இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
  • பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் போராட்டம் தொடரும் என்றனர்.

கொல்கத்தா:

கொல்கத்தாவில் பெண் டாக்டர் கொலை தொடர்பாக நீதி கேட்டு ஜூனியர் டாக்டர்கள் பணிகளை புறக்கணித்ததுடன், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று கடைசி கட்ட பேச்சுவார்த்தைக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்திருந்தார். ஜூனியர் டாக்டர்களின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது மம்தா பானர்ஜி, கொல்கத்தா போலீஸ் கமிஷனரை நீக்குதல் உள்ளிட்ட 3 நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டார்.

மேற்குவங்க மக்கள் மம்தா மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர். இதனால்தான் பாஜக, மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது. மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என்ற மக்களின் வலியுறுத்தலை நிறைவேற்றும் வகையில் பாஜக தொடர்ந்து போராடும் என பா.ஜ.க. மாநில தலைவர் கூறினார்.

இதற்கிடையே, நேற்று முன்தினம் மாலை முதல் நள்ளிரவு வரை ஜூனியர் டாக்டர்கள் கலந்து ஆலோசனை நடத்தினர். அதன்படி, எங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் மற்றும் வேலை நிறுத்தப் பணிகள் தொடரும். மாநில அரசுடன் புதிய பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம் என ஜூனியர் டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆர்.ஜி.கர் மருத்துவமனை ஜூனியர் டாக்டர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர மேற்குவங்க அரசின் அதிகாரிகளுக்கும், ஜூனியர் டாக்டர்களுக்கும் இடையே நேற்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.

இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. கூட்டத்தின் எழுத்துப்பூர்வ அறிக்கையை அரசு கொடுக்க மறுத்ததைத் தொடர்ந்து, டாக்டர்கள் குற்றம் சாட்டினர்.

அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களின் பாதுகாப்பு குறித்து எழுத்துப்பூர்வ உத்தரவுகளை அரசு வெளியிடும் வரை, தங்களது போராட்டம் மற்றும் வேலை நிறுத்தத்தைத் தொடர உள்ளோம் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News