இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற பொதுவான பார்வை அவசியம்.. நிதி ஆயோக் கூட்டத்தில் மோடி பேச்சு
- மாநிலங்கள் நிதி ரீதியாக விவேகமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
- தமிழகம், மேற்கு வங்காளம், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட 11 மாநில முதல் மந்திரிகள் கூட்டத்தைப் புறக்கணித்தனர்.
புதுடெல்லி:
நிதி ஆயோக் அமைப்பின் எட்டாவது ஆட்சிமன்ற குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் நோக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், சுகாதாரம், திறன் மேம்பாடு, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கான பொதுவான பார்வையை உருவாக்க வேண்டியது அவசியம் என்றார். மாநிலங்கள் நிதி ரீதியாக பலமானதாகவும், மக்கள் நலத் திட்டங்களை மேற்கொள்ளும் திறன் கொண்டதாகவும் இருக்கும் வகையில் நிதி ரீதியாக விவேகமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
கூட்டத்தில் மத்திய மந்திரிகள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் மற்றும் உத்தரபிரதேசம், அசாம், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர். தமிழகம், மேற்கு வங்காளம், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட 11 மாநில முதல் மந்திரிகள் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தனர்.