இந்தியா

ரெயில் விபத்துக்கு மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும்- ராகுல் காந்தி

Published On 2024-06-17 09:26 GMT   |   Update On 2024-06-17 09:28 GMT
  • சரக்கு ரெயில் மோதியதில் பயணிகள் ரெயிலின் கடைசிப் பெட்டி தூக்கி வீசப்பட்டது.
  • படுகாயமடைந்த 60 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த விரைவு ரெயில் மீது சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளானது. சரக்கு ரெயில் மோதியதில் பயணிகள் ரெயிலின் கடைசிப் பெட்டி தூக்கி வீசப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே ரெயில் விபத்தில் பலர் படுகாயம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில் 15பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படுகாயமடைந்த 60 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

மேற்கு வங்கத்தில் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.

அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று நம்புகிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அல்லது அவர்களது குடும்பத்தினருக்கு அரசு உடனடியாக முழு இழப்பீடு வழங்க வேண்டும்.

நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் அனைத்து உதவிகளையும் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ள ரெயில் விபத்துக்கள் மோடி அரசின் தவறான நிர்வாகத்தின் மற்றும் அலட்சியப் போக்கின் நேரடி விளைவாகும். இதனால் தினசரி பயணிகளின் உயிர் மற்றும் உடைமை இழப்பு ஏற்படுகிறது.

இன்றைய விபத்து இந்த உண்மைக்கு மற்றொரு உதாரணம் - பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில், இந்த அப்பட்டமான அலட்சியத்தை தொடர்ந்து கேள்வி எழுப்பி, இந்த விபத்துக்களுக்கு மோடி அரசை பொறுப்பேற்க வைப்போம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News