காங்கிரஸ் பிரமுகர் வீட்டுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்: சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை
- புதிய வீட்டில் நடந்துவந்த தரை ஓடுகளை செப்பனிடும் பணியை பார்வையிடுவதற்காக சென்றார்.
- தீவைப்பு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் பெக்கல் அருகே உள்ள தச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் சுஜித்குமார் (வயது34). கூட்டுறவு நகர்ப்புற சங்கத்தின் எழுத்தராக பணிபுரிந்து வரும் அவர், இளைஞர் காங்கிரஸ் கட்சி பிரமுகரான இருந்து வருகிறார்.
மேலும் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். சுஜித்குமார் தச்சங்காட்டில் புதிதாக வீடு கட்டி வருகிறார். அங்கு அனைத்து கட்டுமான பணிகளும் நிறைவைடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
அந்த பணிகளும் சில நாட்களில் முடிவடைந்துவிடும் என்பதால், வருகிற ஓணம் விடுமுறையில் புதிய வீட்டுக்கு புதுமனை புகுவிழா நடத்த திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் புதிய வீட்டில் நடந்துவந்த தரை ஓடுகளை செப்பனிடும் பணியை பார்வையிடுவதற்காக சென்றார்.
அப்போது அவரது வீட்டின் கதவுகள் தீவைத்து எரிக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டில் இருந்த சில பொருட்களும் எரிந்து கிடந்தன. வீட்டினுள் அலமாரி உள்ளிட்ட சில பொருட்கள் அடித்து உடைக்கப்பட்டிருந்தன.
யாரோ மர்மநபர்கள், சுஜித்குமாரின் வீட்டு கதவுகளுக்கு தீவைத்தது மட்டுமின்றி, அலமாரி உள்ளிட்டவைகளை அடித்து உடைத்துள்ளனர். ஆனால் யார் இந்த செயலில் ஈடுபட்டார்கள்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்பு தீவைப்பு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுஜித்குமாரின் புதிய வீட்டுக்கு தீவைத்தது யார்? என்பதை கண்டறிய அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களில் பதிவாகியிருந்த வீடியோ பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் அதிகாலை 2 மணியளவில் சுஜித்குமாரின் வீட்டுக்கு அருகே இரு மோட்டார் சைக்கிள்களும், அதிகாலை 4 மணியளவில் ஒரு காரும் சென்றது பதிவாகியிருந்தது. அதில் சென்ற நபர்களுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
ஆகவே அந்த வாகனங்க ளில் சென்றவர்கள் யார்? என்று அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இளைஞர் காங்கிரஸ் பிரமுகரின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டுள்ள சம்பவம் காசர்கோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.