நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு- அகில இந்திய அளவில் தமிழக மாணவர் முதலிடம்
- மதிப்பெண்கள் மற்றும் பிரிவு வாரியான கட்-ஆஃப் மதிப்பெண்கள் ஆகியவற்றை தேசிய தேர்வு முகமை வெளியிட்டிருக்கிறது.
- தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர்.
நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மாதம் 7ம் தேதி நடந்தது. வன்முறை காரணமாக அன்றைய தேதியில் மணிப்பூர் மாநிலத்தில் மட்டும் தேர்வு நடத்தப்படவில்லை. அந்த மாநிலத்தில் இந்த மாதம் (ஜூன்) 6ம் தேதி 11 நகரங்களில் தேர்வு நடத்தப்பட்டது.
இந்நிலையில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தவர்களின் பெயர்கள் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் பிரிவு வாரியான கட்-ஆஃப் மதிப்பெண்கள் ஆகியவற்றை தேசிய தேர்வு முகமை வெளியிட்டிருக்கிறது. மதிப்பெண் விவரங்கள் neet.nta.nic.in மற்றும் ntaresults.nic.in ஆகிய இணையதளங்களில் விரைவில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவர் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். முதல் 10 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 78693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட அதிகம்.